மக்காச்சோளம் சாகுபடி பரப்பு விரிவாக்கம்: ரூ.30 கோடியில் பயனாளிகளுக்கு மானியம்
மக்காச்சோளம் சாகுபடி பரப்பு விரிவாக்கம்: ரூ.30 கோடியில் பயனாளிகளுக்கு மானியம்
ADDED : ஆக 17, 2024 01:50 AM

சென்னை: மக்காச்சோளம் சாகுபடியை ஊக்குவிக்கும் சிறப்பு திட்டத்தின் கீழ், 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில், விவசாயிகளுக்கு மானிய உதவிகள் வழங்கப்படுகின்றன.
மக்காச்சோளத்தை மதிப்பு கூட்டி தயாரிக்கப்படும் சத்து மாவு, கோழி தீவனம், எத்தனால் உள்ளிட்ட பொருட்களின் தேவை அதிகரித்து வருகிறது.
இதை பயிரிடுவதால், விவசாயிகளுக்கு அதிக வருவாய் கிடைக்கிறது. எனவே, நெல், கரும்பு உள்ளிட்ட வேளாண் பயிர்களுக்கு மாற்றாக, மக்காச்சோளம் சாகுபடியில் விவசாயிகள் கவனம் செலுத்த துவங்கிஉள்ளனர்.
இதை உணர்ந்த வேளாண் துறையும், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில், மக்காச்சோளம் சாகுபடி பரப்பை விரிவாக்கம் செய்வதற்கு முடிவெடுத்து உள்ளது.
சேலம், திருப்பூர், திண்டுக்கல், பெரம்பலுார், துாத்துக்குடி, விருதுநகர், கடலுார், கள்ளக்குறிச்சி, ஈரோடு, விழுப்புரம், நாமக்கல், தர்மபுரி, திருச்சி, அரியலுார், மதுரை, தேனி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 18 மாவட்டங்களில், மக்காச்சோளம் சாகுபடியை ஊக்குவிக்கும் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இது குறித்த அறிவிப்பை, வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம், சட்டசபையில் ஜூன் மாதம் வெளியிட்டார்.
மக்காச்சோள சாகுபடிக்கான நடவுப் பணி, ஆகஸ்ட் முதல் செப்., வரை நடப்பது வழக்கம். இதற்கான பணிகளில் விவசாயிகள் கவனம் செலுத்தி வருகின்றனர்.
எனவே, விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், சிறப்பு திட்டத்தின் கீழ் மானியம் வழங்கும் பணிகளை வேளாண் துறையினர் துவங்கியுள்ளனர்.
இப்பணிகளை விரைந்து முடிக்க, வேளாண் துறை செயலர் அபூர்வா, இயக்குனர் முருகேஷ் ஆகியோர், மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளனர்.
50,000 விவசாயிகள் பயன் பெறுவர்
வேளாண் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மாநிலம் முழுதும், 9.38 லட்சம் ஏக்கரில் மக்காச்சோளம் சாகுபடி நடந்து வருகிறது. சிறப்பு திட்டம் வாயிலாக கூடுதலாக 1.23 லட்சம் ஏக்கர் அளவிற்கு சாகுபடி பரப்பை உயர்த்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக, விவசாயிகளுக்கு மக்காச்சோள விதை, உரங்கள், நுண்ணுாட்ட சத்துக்கள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன.
ஒரு ஏக்கருக்கு 2,400 ரூபாய் மதிப்பிலான இடுபொருட்கள் விவசாயிகளுக்கு கிடைக்கும். அதிகபட்சமாக 5 ஏக்கர் வரை பயன் பெற முடியும். இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கீட்டை உறுதி செய்து, விரைவில் அரசு உத்தரவு பிறப்பிக்கப்படும்.
சாகுபடி பருவம் துவங்கி விட்டதால், காலம் தாழ்த்தாமல் மானிய உதவிகள் வழங்கும் பணி துவங்கியுள்ளது. இத்திட்டம் வாயிலாக குறைந்தபட்சம், 50,000 விவசாயிகள் பயன் பெற வாய்ப்புள்ளது. எந்தெந்த மாவட்டங்களில், எவ்வளவு பரப்பளவில் சாகுபடி செய்ய வேண்டும் என்ற இலக்கும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.