ADDED : ஜூலை 03, 2024 01:49 AM
சென்னை:கடந்த 2017ல், அ.தி.மு.க., ஆட்சியின் போது, சட்டசபைக்குள் தடை செய்யப்பட்ட குட்கா எடுத்துச் சென்றதாக, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அக்கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிராக, உரிமை மீறல் நோட்டீசை உரிமைக்குழு அனுப்பியது.
இதை எதிர்த்து ஸ்டாலின் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், உரிமைக்குழு அனுப்பிய நோட்டீசை ரத்து செய்தது.
இதை எதிர்த்து, சட்டசபை செயலர் மற்றும் உரிமைக்குழு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இம்மனுக்கள், நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், குமரப்பன் அமர்வில், விசாரணைக்கு வந்தன. மேல்முறையீட்டு மனுக்களை வாபஸ் பெற அனுமதிக்கும்படி, அரசு தரப்பில் கோரப்பட்டது.
இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், மேல்முறையீட்டு வழக்கு தொடர்பாக, அரசிடம் இருந்து முறையான அறிவுறுத்தலை பெற்று தெரிவிக்கும்படி, அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டனர்.
இதையடுத்து, இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, “2017ல் நோட்டீஸ் அனுப்பப்பட்ட முந்தைய சட்டசபையின் பதவிக்காலம், 2021ல் முடிந்து விட்டது. அதனால், அந்த நோட்டீசும் காலாவதியாகி விட்டது,” என்றார்.
உடன், கடந்த ஆட்சியில் உரிமைமீறல் குழுவின் தலைவராக இருந்த பொள்ளாச்சி ஜெயராமன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'இந்த வழக்கில் இடையீட்டு மனு தாக்கல் செய்ய உள்ளேன்' என்று தெரிவித்தார். அதனால், வழக்கின் விசாரணையை, 9ம் தேதிக்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.