ADDED : ஏப் 08, 2024 06:36 AM

பல்லடம் : ''சுரண்டிப் பிழைக்கும் கும்பல், மக்களை சுரண்டி சுரண்டி கொள்ளையடித்து வருகிறது,'' என, பல்லடத்தில் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை சாடினார்.
கோவை தொகுதி பா.ஜ., வேட்பாளராக களமிறங்கியுள்ள அண்ணாமலை, திருப்பூர் மாவட்டம், பல்லடம் பகுதியில் நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
தமிழகம் முழுதும் 234 தொகுதிகளிலும் பிரசாரம் செய்து வருகிறேன். ஒவ்வொரு தொகுதியிலும் என்ன பிரச்னை உள்ளது என்பது, எனக்கு தெளிவாக தெரியும்.
எல்லா இடத்திலும் கொள்ளை அடிக்கின்றனர். வாக்காளர்கள் மனது வைத்தால் தான் தாமரை வெற்றி பெறும்.
மாறி மாறி ஓட்டுபோட்டு உங்கள் கைரேகை தேய்ந்தது தான் மிச்சம். ஒரு முறை உங்கள் அண்ணாமலைக்கு வாய்ப்பு கொடுங்கள். தமிழகத்தை மொத்தமாக மாற்றிக் காட்டுவேன்.
முதல்வர், அமைச்சர், எம்.எல்.ஏ., என அனைவரும் தி.மு.க., எனில் யார் கேள்வி கேட்பர்? 70 ஆண்டுகளாக சுரண்டிப் பிழைக்கும் கும்பல் உங்களை சுரண்டி கொள்ளையடித்து வருகிறது. ஏழைகளை ஏழைகளாகவே வைத்துள்ளனர்.
மத்திய அரசு கொடுக்கும் திட்டங்களை இங்குள்ள கும்பல் தடுக்கிறது. மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்; தைரியமாக கேள்வி கேட்க வேண்டும் என்றால், அண்ணாமலைக்கு ஓட்டு போடுங்கள்.
அனைவருக்கும் கான்கிரீட் வீடு கட்டி தர வேண்டும் என்பது தான் எங்கள் லட்சியம். அதற்கு, 3 சென்ட் இடம் வேண்டும். இதற்கான நிலம் இல்லை என்பதால், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட திட்டமிட்டுஉள்ளோம்.
பிரச்னைகளுக்கு தீர்வு காண ஒரு வாய்ப்பு கொடுங்கள். இங்கிருந்த எம்.பி.,க்கள் பார்லிமென்டுக்கு சென்று மவுன விரதம் இருந்து விட்டு, 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தற்போது வந்துள்ளனர்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சிந்தனை, ஒவ்வொரு தேவை உள்ளது. அனைவரது தேவைகளையும் நிறைவேற்ற பிரதமர் மோடியால் மட்டுமே முடியும். ஒன்பது ஆண்டில் 14 அணைகளை காமராஜர் கட்டினார்.
காமராஜர் காலத்துக்கு பின், நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை. நீர் ஆதாரம் அளிக்கும் ஆனைமலை -நல்லாறு திட்டம் வந்தே தீரும்.
எனக்கு ஒரே ஓர் ஆண்டு மட்டும் அவகாசம் கொடுங்கள். சோமனுாரில் மத்திய அரசின் சார்பில் ஜவுளி சந்தை அமைக்கப்படும். நுால் வங்கி திட்டத்தால் நுால் விலை சீர்படுத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

