ADDED : ஜூலை 01, 2024 03:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்தலக்குண்டு: திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு போலீஸ் ஸ்டேஷனில் முதல் தளத்தில் திடீரென பயங்கர வெடி சத்தம் கேட்டதால் போலீசார் அதிர்ச்சிக்குள்ளாயினர்.
வெடி சத்தம் கேட்ட அறையிலிருந்து சிறிது நேரத்தில் கரும்புகை வெளியேறத் துவங்கியது. இதனால் பணியிலிருந்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர். பின் சுதாரித்துக் கொண்டு வெடி சத்தம் கேட்ட அறையில் போலீசார் தண்ணீரை ஊற்றி மேலும் அங்கிருந்த பொருட்களை வெடிக்காமல் தடுத்தனர். கரும்புகை சூழ்ந்ததால் உடனடியாக கம்ப்யூட்டர் சாதனங்கள் வெளியே எடுத்து செல்லப்பட்டன. தீயணைப்பு வீரர்கள் விரைந்து கரும்புகையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
விசாரணையில் அறையில் வைக்கப்பட்டிருந்த பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட பட்டாசுகள், மதுபாட்டில்கள் வெப்ப அழுத்தத்தால் தானாக வெடித்தது தெரிய வந்தது.