ADDED : ஆக 28, 2024 02:55 AM

திருப்பூர்; இந்தியாவின், 'டாப் - 10' நாடுகளுக்கான ஆயத்த ஆடை ஏற்றுமதி, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், 4.20 சதவீதம் அதிகரித்துள்ளது.
நம் நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம், மூன்று மாதங்களாக இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. பழைய ஆர்டர்களை பெறுவதுடன், புதிய ஆர்டர் பெறும் முயற்சியில் ஏற்றுமதியாளர்கள் இறங்கியுள்ளனர்.பிப்., மாதத்தில் இருந்து ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்க துவங்கியது.
குறிப்பாக, நடப்பு நிதியாண்டு துவக்கத்தில் இருந்து, ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பியுள்ளது. ஏப்., முதல், ஜூலை மாதம் வரையிலான, நான்கு மாதங்களில், 42,791 கோடி ரூபாய்க்கு ஆயத்த ஆடை ஏற்றுமதி நடைபெற்றுள்ளது.
இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதியில், டாப் - 10 நாடுகள் பட்டியலில், அமெரிக்கா, பிரிட்டன், ஐக்கிய அரபு நாடுகள், ஜெர்மனி, ஸ்பெய்ன், நெதர்லாந்து, பிரான்ஸ், சவுதி அரேபியா, இத்தாலி மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் உள்ளன.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், டாப் - 10 நாடுகளுக்கான மொத்த ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது. கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில், 31,012 கோடி ரூபாய்க்கு ஆயத்த ஆடை ஏற்றுமதி நடந்தது.
நடப்பு நிதியாண்டின், முதல் மூன்று மாதங்களில், 32,397 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, 4.20 சதவீத உயர்வாகும்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் கூறுகையில், ''நம் நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகத்தில், அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. ஏப்., முதல் ஜூன் வரை, 10,794 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி நடந்துள்ளது.
''திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளருக்கு, சர்வதேச அளவில், பசுமை சார் உற்பத்திக்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதன் காரணமாக, புதிய ஆர்டர் விசாரணை அதிகம் நடந்து வருகிறது,'' என்றார்.