போலி கல்விச்சான்று: ஓய்வு பெற்றவர்களின் பணப்பலன் நிறுத்தம்
போலி கல்விச்சான்று: ஓய்வு பெற்றவர்களின் பணப்பலன் நிறுத்தம்
ADDED : மார் 04, 2025 02:54 AM

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் போலி கல்விச்சான்று கொடுத்து பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களின் பணப்பலன்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இக்கோயிலில் சில ஆண்டுகளுக்கு முன் சேவுகர் உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்கள் நியமிக்கப்பட்டனர்.
அதில் சிலரது பள்ளி கல்விச்சான்று போலி எனத்தெரியவந்தது. சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மூவர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். இதைதொடர்ந்து மற்ற ஊழியர்களின் கல்விச்சான்றுகளின் உண்மை தன்மை ஆய்வு செய்யப்பட்டது.
இதில் 26 பேர் போலி கல்விச்சான்றுகளை கொடுத்தது உறுதியானது. அவர்களிடம் அறங்காவலர் குழு விளக்கம் கேட்டது.
அரசியல் தலையீட்டால் இன்னும் 'விசாரணையிலேயே' இருந்து வருகிறது.
இந்நிலையில் இந்தாண்டு ஜனவரி, பிப்ரவரியில் ஊழியர்கள் சிலர் பணி ஓய்வு பெற்றனர். இதில் போலி கல்விச்சான்று கொடுத்தவர்களும் அடங்குவர். விசாரணை நிலுவையில் இருப்பதால் அவர்களின் பணி ஓய்வூதிய பலன்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.