UPDATED : ஜூன் 03, 2024 10:05 AM
ADDED : ஜூன் 03, 2024 07:14 AM

சென்னை : லோக்சபா தேர்தல் காரணமாக தமிழகத்தில், 36 சுங்கச்சாவடிகளில் நிறுத்தி வைக்கப்பட்ட கட்டண உயர்வு, இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
நாடு முழுதும், 1.70 லட்சம் கி.மீ.,க்கு மேல் தேசிய நெடுஞ்சாலைகள், விரைவு சாலைகள், பசுமை வழிச்சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றில் பயணிக்கும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிக்க, 855 சுங்கச்சாவடிகள் உள்ளன. தமிழகத்தில், 6,805 கி.மீ., தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பயணிக்கும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிக்க, 63 இடங்களில் சுங்கச்சாவடிகள் உள்ளன.
சுங்கச்சாவடிகளில், ஆண்டுக்கு ஒருமுறை கட்டணத்தை, 5 முதல் 10 சதவீதம் வரை அதிகரித்துக் கொள்ள, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் 36 சுங்கச்சாவடிகள் உள்பட, நாடு முழுவதும் 200க்கும் மேற்பட்ட சுங்கச் சாவடிகளில், ஏப்ரல், 1 முதல் கட்டண உயர்வு நடைமுறைக்கு வர இருந்தது.
லோக்சபா தேர்தல் காரணமாக, அந்த கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது.
லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு நிறைவடைந்ததை தொடர்ந்து, இன்று முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. அதன்படி, தமிழகத்தில், 54 சுங்கசாவடிகளில், குறைந்தபட்சம் 5 ரூபாய் முதல் அதிகபட்சம் 20 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. ஒரே நேரத்தில், பல சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு நடைமுறைக்கு வருவதால், வாகன ஓட்டிகள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.