நெல் விற்று 20 நாட்களாகியும் பணம் வரவில்லை: விவசாயிகள் குமுறல்
நெல் விற்று 20 நாட்களாகியும் பணம் வரவில்லை: விவசாயிகள் குமுறல்
ADDED : மார் 06, 2025 02:30 AM
ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு நேரடி கொள்முதல்நிலையங்களில் விற்கப்படும் நெல் மூடைகளுக்கு பணம் 20 நாட்களாகியும் வரவாகாததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
மாவட்டத்தில் ஒரு லட்சத்து 28ஆயிரம் எக்டேரில் நெல் சாகுபடி நடக்கிறது. தற்போது அறுவடை பணிகள் நடக்கிறது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் 41இடங்களில் நேரடி கொள்முதல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் நெல் கொண்டு வருவது அதிகரித்துள்ள நிலையில் அதற்குரிய பணத்தை வங்கி கணக்கில் வரவு வைப்பது தாமதமாகிறது.
மங்களக்குடி குரூப் விவசாயி எம்.முருகானந்தம் கூறியது: சிறுமலை கோட்டையில் உள்ள அரசு நேரடிகொள்முதல் நிலையத்தில் 415 நெல் மூடைகளை பிப்.,13ல் விற்றுள்ளேன். ரூ.4 லட்சத்து 6000 தர வேண்டும். இதுவரை எனது வங்கி கணக்கில் வரவு வைக்கவில்லை. கேட்டால் இன்று, நாளை என இுழுக்கின்றனர்.
திருவாடானை விவசாயிகள் குழு ஒருங்கிணைப்பாளர் கவாஸ்கர் கூறுகையில், 'பணம் வந்தால் தான் அறுவடை கூலி, கடனை செலுத்த முடியும். திருவெற்றியூரில் 1000 மூடைகளுக்கு பணம் வரவில்லை. கலெக்டர் வரை புகார் தெரிவித்துள்ளோம். விரைவில் பணத்தை வரவு வைக்க வேண்டும் என்றார்.
நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் கூறுகையில், இதுவரை ரூ.2 கோடி வரை விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. நிதி வர தாமதம் ஏற்பட்டுள்ளது. ஒரிரு நாட்களில் விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.