தடை செய்யப்பட்ட விதை பட்டியல் வெளியிட விவசாயிகள் எதிர்பார்ப்பு
தடை செய்யப்பட்ட விதை பட்டியல் வெளியிட விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : மார் 08, 2025 12:23 AM
விருதுநகர்:தமிழகத்தில் குறைந்து வரும் விதை ஆய்வுகளை அதிகப்படுத்தி, தடை செய்யப்பட்ட ரகங்கள் பற்றி அறிவிப்பு வெளியிட வேண்டுமென விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழகத்தில், நெல், மக்காச்சோளம், காய்கறி விதைகளுக்கு வீரிய ஒட்டு ரகங்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இதனால், புதிய புதிய விதைகள் வருகின்றன. இதற்காக வேளாண் துறையில் விதை ஆய்வு துறை இயங்கி வருகிறது.
இதில், மாவட்டங்கள் தோறும் துணை இயக்குநர் நிலை அலுவலர்கள், தாலுகா தோறும் விதை ஆய்வாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்கள் இனத்துாய்மை, புறத்துாய்மை, கலப்பு உள்ளிட்ட எல்லாவற்றையும் ஆய்வு செய்து சான்று அட்டை வழங்குவர்.
விதை பண்ணைகளில் சான்று அட்டை கட்டாயம் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், சில விதைகள் விளையாமல் விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துகின்றன.
விருதுநகர் மாவட்டத்தில், ராஜபாளையம் வேளாண் அலுவலகத்தில் வாங்கிய வீரியமிக்க சோள விதை அதிக சோள கதிர்கள் விளைந்தும் மணி பிடிக்காமல் நஷ்டம் ஏற்பட்டது. இது, வேளாண் அலுவலகத்தில் இருந்து வாங்கியது என்பதால் விவசாயிகள் எதிர்த்து கேள்வி எழுப்பினர்.
அதுவே, தனியார் விதை விற்பனை கடைகளில் வாங்கியிருந்தால் கேள்வி கேட்க வாய்ப்பில்லை. அதே சமயம் தனியார் விதை கடைகளில் ஆய்வு செய்வது குறைந்து வருவதாக குற்றச்சாட்டு உள்ளது.
தாலுகாக்கள் தோறும் விதை ஆய்வு செய்து, தடை செய்யப்பட்ட ரகங்கள், எந்தக்கடை என, வட்டார வேளாண் அலுவலக நோட்டீஸ் போர்டுகளில் அறிவிப்பாக வெளியிட வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.