ADDED : செப் 17, 2024 09:49 PM

தஞ்சாவூர்:காவிரி டெல்டா பாசனத்திற்காக, ஜூலை 28ல் மேட்டூரில் இருந்தும், ஜூலை 31ல் தஞ்சாவூர் மாவட்டம், கல்லணையில் இருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில், தண்ணீர் திறக்கப்பட்டு, 45 நாட்களை கடந்த நிலையிலும், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் போன்ற கடைமடை பகுதிக்கு முறை வைத்து தண்ணீர் விடப்படுவதால், பெரும்பாலான ஏரி, குளங்கள் வறண்டு, கால்நடைகளுக்கு மேய்ச்சல் தளங்களாக காட்சியளிக்கின்றன.
இந்நிலையில், சேதுபாவாசத்திரம் அருகே திருவத்தேவன் கிராமத்தில், 20 ஏக்கர் கருப்பட்டிக்காடு குளம் தண்ணீர் இன்றி வறண்டு காட்சியளிக்கிறது. இக்குளத்து நீரால், 200க்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
அத்துடன், சுப்பம்மாள் சத்திரம், வல்லவன் பட்டினம், திருவத்தேவன், கருப்பட்டிக்காடு, மேட்டுக்கொல்லை பகுதி விவசாயிகள் முறையாக தண்ணீர் வராததால், பயிர் செய்ய தயக்கம் காட்டி, விவசாய பணிகளை துவக்காமலும், ஒரு சிலர் துவக்கிய நிலையில் பாசனத்திற்கு தண்ணீர் இல்லாமல் பயிர்கள் காயும் நிலை ஏற்பட்டுள்ளது.
விவசாயிகள் கூறியதாவது:
கல்லணை கால்வாய், நாகுடி பிரிவு வாய்க்கால் வாயிலாக சேதுபாவாசத்திரம் பகுதியில் உள்ள கடைமடை ஏரி, குளங்கள் நிரப்பப்படும். மேலும், நேரடி பாசன வசதியும் உள்ளது. இருந்தபோதிலும், இப்பகுதியில் உள்ள ஏரி, குளங்களிலும் தண்ணீர் இல்லாமல் வறண்டு காட்சியளிக்கிறது.
இதனால், விவசாய பணிகளை துவக்குவதில் தயக்கம் ஏற்பட்டுள்ளது. தண்ணீர் திறந்து 45 நாட்கள் கடந்து விட்டன. கடைமடை பகுதிகளில் உள்ள ஏரி, குளங்களில் தண்ணீரை நிரப்பி பாசனத்தை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு கூறினர்.