யானை வழித்தடத்தில் பண்ணை: அரசுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை
யானை வழித்தடத்தில் பண்ணை: அரசுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை
ADDED : ஜூன் 29, 2024 01:14 AM

சென்னை: கல்லாரில் யானைகள்வழித்தடத்தில் உள்ள தோட்டக்கலை பண்ணையை இடமாற்றம் செய்யாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும் என, சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் கல்லார் பகுதியில் யானைகள் வழித்தடத்தில் தோட்டக்கலை துறைக்கு சொந்தமான பண்ணை உள்ளது.
அதை வேறு இடத்துக்கு மாற்றி, நிலத்தை வனத்துறையிடம் ஒப்படைக்க உத்தரவிடக் கோரி, மனோஜ் இமானுவேல் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'யானை வழித்தடத்தில் உள்ள பண்ணையை வேறு இடத்துக்கு மாற்றுவது தொடர்பாக, அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்க அவகாசம் கோரப்பட்டது.
'இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக அரசு, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவதில் குறைந்தபட்ச மரியாதையாவது கொடுக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அரசு அறிவுறுத்த வேண்டும்' என, நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், கல்லார் தோட்டத்தை இடமாற்றுவது தொடர்பாக, அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்கும்படி உத்தரவிட்ட நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாவிட் டால், தோட்டக்கலை துறை செயலருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுப்பதை தவிர வேறு வழியில்லை என்றும் எச்சரித்தனர்.
பின், வழக்கு விசாரணையை ஆக., 7க்கு தள்ளி வைத்தனர்.
மற்றொரு வழக்கு
தமிழகத்தில் யானைகள் வழித்தடங்கள் குறித்து, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு செய்ய வேண்டும்; கோவை சாடிவயல் பகுதியில், யானைகள் மறுவாழ்வு மையம் அமைக்கவும், தமிழ்நாடு தொழில்நுட்ப நகர கட்டுமானத்துக்கு தடை விதிக்க வேண்டும் என, சென்னை கோட்டூர் பகுதியைச் சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் எஸ்.முரளிதரன் மனுக்கள் தாக்கல் செய்திருந்தார்.
விசாரணை
இந்த மனுக்களுக்கு பதிலளிக்கும்படி, மத்திய,மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்குகள், நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்ரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.
அப்போது, இந்த மனுக்களுக்கு மாநில அரசு தரப்பில் எந்த பதில் மனுவும் தாக்கல் செய்யவில்லை என, மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, வழக்கு விசாரணையை ஜூலை 5 வரை தள்ளிவைத்த நீதிபதிகள், அதுவரை தமிழ்நாடு தொழில்நுட்ப நகர கட்டுமான பணிகளை பொறுத்தவரை, தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.