ADDED : ஏப் 23, 2024 11:58 PM
சென்னை:சென்னை விமான நிலையத்தில், அமெரிக்க பயணியரிடம் துப்பாக்கி குண்டு பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னையில் இருந்து நேற்று முன்தினம் இரவு, குஜராத் மாநிலம் அகமதாபாத் செல்லும், 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' தனியார் விமானத்தில் பயணிக்க வந்தவர்களிடம், பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது, அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த ஆண்ட்ரூ யர்ஷன், 40, என்பவரின் கைப்பையை பரிசோதித்தபோது, அபாயகரமான பொருள் இருப்பதற்கான எச்சரிக்கை மணி ஒலித்தது. உஷாரான அதிகாரிகள், கைப்பையை திறந்து பார்த்தபோது, அதனுள், பாயின்ட் 223 ரக துப்பாக்கியில் பயன்படுத்தும் குண்டு இருந்தது. அதை பறிமுதல் செய்த அதிகாரிகள், அமெரிக்க பயணியின் பயணத்தை ரத்து செய்தனர்.
அந்த பயணியிடம் விசாரித்தபோது, தன்னிடம் சொந்த உபயோகத்திற்காக, தங்கள் நாட்டு லைசன்ஸ் உடன் கூடிய துப்பாக்கி இருப்பதாகவும், அதில் பயன்படுத்தக்கூடிய ஒரு குண்டு, தவறுதலாக கைப்பையில் இருந்துள்ளதாகவும் கூறியுள்ளார். இதே கைப்பையை, அமெரிக்காவில் இருந்து சென்னை வந்தபோது எடுத்து வந்ததாகவும், அப்போது அதை யாரும் பார்க்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
தேவைப்பட்டால் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று எழுதி வாங்கிய அதிகாரிகள், அவரை விடுவித்தனர். வேறு விமானத்தில் அகமதாபாத் செல்ல அனுமதித்தனர்.

