வயது வரம்பை தளர்த்தும்படி நாட்டுப்புற கலைஞர்கள் கோரிக்கை
வயது வரம்பை தளர்த்தும்படி நாட்டுப்புற கலைஞர்கள் கோரிக்கை
ADDED : ஜூன் 01, 2024 03:45 AM
சென்னை: நாட்டுப்புற கலைப்பயிற்சி அளிக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள 50 வயது பூர்த்தி என்ற வரம்பை தளர்த்த வேண்டும் என, கலைஞர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தமிழக கலை பண்பாட்டு துறை சார்பில், தமிழக நாட்டுப்புற கலைகளை, இளைஞர்களுக்கு கற்பிக்கும் வகையில், 25 இடங்களில் பகுதி நேர கலைப் பயிற்சி மையங்கள் செயல்பட உள்ளன.
பயிற்சி மையம்
சென்னை, மதுரை, கோவை, திருவையாறு அரசு இசை கல்லுாரிகள்; சென்னை, கும்பகோணம் அரசு கவின் கலை கல்லுாரிகள்; மாமல்லபுரம் அரசு கட்டட மற்றும் சிற்பக்கலை கல்லுாரிகளில் இந்த பயிற்சி மையங்கள் செயல்பட உள்ளன.
அதேபோல், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம், கிருஷ்ணகிரி, விழுப்புரம், கடலுார், சீர்காழி, திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலுார், கரூர், ராமநாதபுரம், சிவகங்கை, ஈரோடு, திருநெல்வேலி மற்றும் துாத்துக்குடி நகரங்களில் உள்ள அரசு இசைப் பள்ளிகள் மற்றும் தஞ்சாவூர் மண்டல கலை பண்பாட்டு மையம் ஆகிவற்றிலும் இந்த மையங்கள் செயல்பட உள்ளன.
ஒவ்வொரு மையத்திலும் வெள்ளி, சனிக்கிழமைகளில் மாலை 4:00 முதல் 6:00 மணி வரை, நான்கு வித கலைகள் கற்பிக்கப்பட உள்ளன. இந்த ஓராண்டு படிப்புக்கு சான்றிதழும் வழங்கப்பட உள்ளது.
பயிற்சி வகுப்புகளை நடத்த, ஒவ்வொரு கலைக்கும் ஒருவர் என, ஒரு மையத்துக்கு நான்கு பேர் என, 25 மையங்களில் 100 பகுதி நேர பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அவர்களுக்கு, மாதம் 7,000 ரூபாய் மதிப்பூதிய மாக வழங்கப்படவுள்ளது.
இந்த பயிற்சியை நடத்த விரும்புவோர், 50 வயதுக்கு மேற்பட்டோராக, நாட்டுப்புற கலைகளை நிகழ்த்திய அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும் என்ற தகுதி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது, கலைஞர்களுக்கான வேலைவாய்ப்பை பாதிப்பதாகக் கூறப்படுகிறது.
விருப்பமில்லை
இது குறித்து, அவர்கள் கூறியதாவது:
பல ஊர்களில், 50 வயதுக்கு மேற்பட்டோரில் பலருக்கு, நாட்டுப்புற கலைக் குடும்பத்தைச் சேராதோருக்கு கலையை கற்பிக்க விருப்பமில்லை. அதனால், பல ஊர்களில் ஆசிரியர் கிடைக்காத நிலை உள்ளது.
அதை, 40 வயதாக நிர்ண யித்தால், இந்த நிலை மாறு வதோடு, அவர்களுக்கு பகுதி நேர வருவாயும் கிடைக்கும். இதை, கலை பண்பாட்டு துறை பரிசீலிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.