ADDED : ஏப் 18, 2024 11:32 PM
சென்னை:கடந்த தேர்தல்களை விட, இந்த தேர்தலையொட்டி நடந்த சோதனைகளில், குறைவான பணமே சிக்கியுள்ளது. இதர பொருட்கள் மதிப்பை கணக்கிடும் போது, இந்த தேர்தல் முதலிடத்தை பிடித்துள்ளது.
தேர்தலில் பணப் பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க, பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைத்து, வாகன சோதனைகள் நடத்தப்படுகின்றன; வருமான வரித்துறை சோதனையும் நடத்தப்படுகிறது.
சோதனையின் போது, உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்படும் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. தமிழகத்தில், 2014 லோக்சபா தேர்தலில், 25.05 கோடி ரூபாய் ரொக்கம், 51.83 கோடி ரூபாய் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதன்பின், 2016 சட்டசபை தேர்தலில், 113.8 கோடி ரூபாய் ரொக்கம்; 2019 லோக்சபா தேர்தலில், 229.73 கோடி ரூபாய் ரொக்கம், 709.66 கோடி மதிப்புள்ள பொருட்கள்; 2021 சட்டசபை தேர்தலில், 236.70 கோடி ரூபாய் ரொக்கம், 176.46 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த தேர்தலில், நேற்று முன்தினம் வரை 173.85 கோடி ரூபாய் ரொக்கம், 1,083.77 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றில், தனியார் நிறுவனத்திற்கு எடுத்து செல்லப்பட்ட 1,425 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதால் பொருட்கள் மதிப்பு அதிகமானது.

