அவலத்தை மறைக்கவே அயல்நாட்டில் போட்டோஷுட்: அரசு மீது இ.பி.எஸ்., விமர்சனம்
அவலத்தை மறைக்கவே அயல்நாட்டில் போட்டோஷுட்: அரசு மீது இ.பி.எஸ்., விமர்சனம்
UPDATED : செப் 02, 2024 12:22 PM
ADDED : செப் 02, 2024 12:15 PM

சென்னை: தமிழகத்தின் அவலநிலையை மறைப்பதற்காகவே, வெளிநாட்டு போட்டோ ஷுட்டிலும், கார் ரேஸிலும் தி.மு.க., அரசு கவனம் செலுத்தி வருவதாக இ.பி.எஸ்., விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: விளம்பரங்களுக்கு அப்பால் செய்திகளைப் பார்த்தால், வழக்கம் போல சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளும் போதைப்பொருள் புழக்கமுமே விடியா அரசின் உண்மை அடையாளங்களாக நாளிதழ்களை அலங்கரிக்கின்றன.
வாரக் கொலைப் பட்டியல்கள் தொடர்கின்றன. போதைப்பொருள் புழக்கமும் கடுகளவு குறைந்த பாடில்லை. சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பில் தமிழ்நாடு முக்கிய இடம் வகிக்கிறது என்றாலும் மிகையாகாது. இளைஞர்கள், குறிப்பாக கல்லூரி மாணவர்கள் இடையே இந்த போதைப்பொருட்கள் சர்வசாதாரணமாக புழங்குவதை சமீபத்திய செய்திகள் உணர்த்துகின்றன. இது மிகுந்த கவலையளிக்கிறது.
வெளிநாட்டு போட்டோஷூட்டிலும், ஆடம்பரப் பகட்டு கார் ரேஸிலும் மட்டுமே கவனம் செலுத்தி, அதன் வர்ணஜாலங்களுக்கு இடையே தமிழ்நாட்டின் உண்மை அவல நிலையை மறைக்க முயற்சிக்கும் அரசுக்கு எனது கடும் கண்டனம். அடுத்து என்ன விளம்பரம் என்பதில் மட்டுமே இருக்கும் கவனத்தை, மாநிலத்தின் அடிப்படை பிரச்னைகளான சட்டம் ஒழுங்கை சீர்படுத்துவதிலும், போதைப்பொருள் புழக்கத்தை ஒழிப்பதிலும் கவனம் செலுத்துமாறு முதல்வரை வலியுறுத்துகிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.