ADDED : ஏப் 08, 2024 06:29 AM
சென்னை : தமிழகத்தில் சுற்றுலா தலங்களான ஊட்டி, கொடைக்கானல் அமைந்துள்ள நீலகிரி, திண்டுக்கல் உள்ளிட்ட 13 மாவட்டங்களில், 198 இடங்களில் நேற்று காட்டுத்தீ ஏற்பட்டது.
தமிழகத்தில் கோடைக் காலம் துவங்கும் சமயத்தில், பிப்., --- மார்ச் மாதங்களில், வனப்பகுதிகளில் தீ விபத்துகள் ஏற்படுவது வழக்கம். உள்ளூர் அளவில் இந்த விபத்துகள் உடனுக்குடன் கட்டுப்படுத்தப்படும்.
குறிப்பிட்ட சில இடங்களில் ஏற்படும் காட்டுத்தீ, பெரும் விபத்துகளாக மாறும் போது, அது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
அந்த வகையில், நடப்பு ஆண்டில் ஏப்ரல் மாதம் துவங்கிய நிலையிலும், காட்டுத்தீ சம்பவங்கள் குறையவில்லை.
நாடு முழுதும் காட்டுத்தீ சம்பவங்களை, தொலையுணர்வு செயற்கை கோள் வாயிலாக, இந்திய வன ஆராய்ச்சி நிறுவனம் கண்காணித்து வருகிறது.
இந்நிறுவனம் நேற்று, தமிழக வனத்துறைக்கு அனுப்பிய தகவலில், 13 மாவட்டங்களில், 198 இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டதாக தெரிவித்து உள்ளது.
குறிப்பாக, நீலகிரியில், 34 இடங்கள்; திண்டுக்கல் மாவட்டத்தில், 31; கிருஷ்ணகிரியில், 24 இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, அந்தந்த மாவட்ட அதிகாரிகள் உஷார் படுத்தப்பட்டுஉள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

