கூட்டுறவு சங்க அதிகாரிகள் ஊழல் அம்பலம்: 21 பேர் சஸ்பெண்ட்!
கூட்டுறவு சங்க அதிகாரிகள் ஊழல் அம்பலம்: 21 பேர் சஸ்பெண்ட்!
UPDATED : ஏப் 12, 2024 05:40 AM
ADDED : ஏப் 11, 2024 08:48 PM

சென்னை: ஈரோடு மாவட்டத்தில், எலவமலை கூட்டுறவு கட்டட சங்கத்தில், நிலத்தை வாங்கி மனையாக்கி விற்பதில், 33.23 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த நுாதன ஊழல் அம்பலமானதை அடுத்து, 21 அதிகாரிகள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
தமிழகம் முழுதும், 680க்கும் மேற்பட்ட கூட்டுறவு வீட்டுவசதி மற்றும் கட்டட சங்கங்கள் செயல்படுகின்றன. இச்சங்கங்கள் அந்தந்த பகுதிகளில் நிலம் வாங்கி, அவற்றை மனைப்பிரிவு திட்டங்களாக மேம்படுத்தி வருகின்றன.
இது போன்ற கூட்டுறவு சங்கங்களிடம் மனை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். நிலம் வாங்கி மனைப்பிரிவு ஏற்படுத்த இந்த சங்கங்களுக்கு, கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களின் இணையம் உதவுகிறது.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுகா, முகாசிபிடாரியூரில், எலவமலை கூட்டுறவு கட்டட சங்கம் சார்பில், புதிய மனைப்பிரிவு திட்டம் அறிவிக்கப்பட்டது. இங்கு, 33.23 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 11 ஏக்கர் பரப்பளவில் மனைப்பிரிவு உருவாக்கி விற்பனை நடந்து வருகிறது.
கொள்முதல்
ஆனால், இதற்கான நிலத்தை தனியாரிடம் இருந்து கொள்முதல் செய்ததில், அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது. இங்கு, தனியார் ஒருவர், 2.01 லட்சம் ரூபாய் என்ற அடிப்படையில் ஏக்கர் நிலத்தை 2022ல் வாங்குகிறார்.
இதற்கான பத்திரப்பதிவு முடிந்ததில் இருந்து, 34 நாட்களில் இந்த நிலங்களை, ஏக்கர் 1.84 கோடி ரூபாய் என்ற விலையில், கூட்டுறவு சங்கத்துக்கு கொள்முதல் செய்ய நிர்வாகிகள் அனுமதி வழங்கி உள்ளனர். இதில், நிலம் கொள்முதல் செய்யும் போது, அதற்கான மதிப்பை ஆராய்வதற்கான வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை.
இவ்வாறு, 11 ஏக்கர் நிலத்தை வாங்குவதற்கான செலவில், 60 சதவீத தொகையை தமிழக கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களின் இணையத்திடம் கோரியுள்ளனர். இத்தொகை தனி நபர் ஒருவர் பெயரில் கடனாக வழங்கப்பட்டுள்ளது.
இதில், பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக வந்த புகார்கள் அடிப்படையில், கூட்டுறவு துறை மேலதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அதில், பத்திரப்பதிவு வாயிலாக அரசுக்கு கிடைக்க வேண்டிய 3.86 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டதும் தெரியவந்தது.
லஞ்ச ஒழிப்பு விசாரணை
இங்கு, 11 ஏக்கர் நிலத்தை கொள்முதல் செய்ததில், 33.21 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்தது, முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, கூட்டுறவு சங்கங்களின், இரு கூடுதல் பதிவாளர்கள், ஒரு துணை பதிவாளர், இரு சார் --- பதிவாளர்கள், செயலர், மேலாளர் என, 21 பேர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை வீட்டுவசதி நகர்ப்புற வளர்ச்சி துறை பிறப்பித்துள்ளது. மேலும், இந்த வழக்கை, கூட்டு சங்கங்களின் கண்காணிப்பு பிரிவு, லஞ்ச ஒழிப்பு துறை ஆகியவை விசாரிக்கவும் வீட்டுவசதி துறை உத்தரவிட்டு உள்ளது.
இது குறித்து, வீட்டுவசதி துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: ஈரோடில் மனைப்பிரிவு திட்டத்துக்காக நிலம் வாங்கியதில் பெரிய அளவில் மோசடி நடந்துள்ளது. இது குறித்து முதலில் துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டது. இதில், துறைக்கு வெளியில் இருப்பவர்கள் யார் யார் பயனடைந்துள்ளனர் என்பதை அறிய, லஞ்ச ஒழிப்பு துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

