UPDATED : செப் 04, 2024 05:49 AM
ADDED : செப் 04, 2024 05:47 AM

திருப்பூர் : 'ஜியோ' மொபைல் போன் இணைப்புகளுக்கு, சலுகை விலையில் ரீ-சார்ஜ் என வாடிக்கையாளர்களிடம் பண மோசடி செய்யும் நபர்களிடம், பலரும் பணத்தை இழந்தனர்.
'பேஸ்புக்'கில், ஜியோ நிறுவனம், தமிழக வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகையில் ரீ -சார்ஜ் வசதி வழங்குவதாக ஒரு விளம்பரம் பரவி வருகிறது. இதில் 2,999 ரூபாய் மதிப்பு ரீசார்ஜ், 499 ரூபாய், 1,009 ரீசார்ஜ் 249 ரூபாய், 666 ரூபாய் மதிப்பு ரீசார்ஜ், 199 ரூபாய் என அதிரடி சலுகை 80 முதல் 90 சதவீதம் வரை தள்ளுபடி. இச்சலுகை நீண்ட காலம் நீடிக்காது, என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை நம்பிய பலருரும், ஜியோ நிறுவனத்தின் உண்மையான விளம்பரம் எனக் கருதி விடுகின்றனர். அதில் தெரிவித்துள்ள இணைப்பை தொட்டு உள்ளே நுழைந்து பணத்தை செலுத்துகின்றனர். ஆனால், பணம், தனி நபர் பெயரில் உள்ள வங்கி கணக்குக்குச் செல்கிறது. திருப்பூரில் இதுபோல் பணத்தை இழந்துள்ளனர்.
அறிமுகமில்லாத, புதிய 'ஆப்'களில் இது போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களைக் கண்டு அதில் பணத்தை இழக்க வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்து அறிவுறுத்தி, எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.