மோசடி நிதி நிறுவன முகவர்கள் 'எஸ்கேப்' தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை
மோசடி நிதி நிறுவன முகவர்கள் 'எஸ்கேப்' தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை
ADDED : மே 04, 2024 12:18 AM
சென்னை:'ஆருத்ரா' உள்ளிட்ட மோசடி நிதி நிறுவனங்களின் முகவர்கள், 25 பேரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
தமிழகத்தில் சென்னை உட்பட, மாநிலத்தின் பல பகுதிகளில், ஆருத்ரா, ஹிஜாவு, ஐ.எப்.எஸ்., உள்ளிட்ட, எட்டு நிதி நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன. இதன் வாயிலாக, அதிக வட்டி தருவதாக, 2.91 லட்சம் பேரிடம், 14,168 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது. இதுகுறித்து, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஹிஜாவு, ஐ.எப்.எஸ்., நிதி நிறுவன இயக்குனர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி விட்டனர். அவர்களை கைது செய்ய முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். இந்நிலையில், மோசடி நிதி நிறுவனம் என தெரிந்திருந்தும், கமிஷன் தொகைக்கு ஆசைபட்டு, பணம் முதலீடு செய்ய வைத்த, முகவர்கள், 500 பேரின் பட்டியலை போலீசார் தயாரித்துள்ளனர். அவர்களின் வங்கி கணக்கு முடக்கம், முறைகேடாக வாங்கிய சொத்துக்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 400க்கும் மேற்பட்டோருக்கு, 'சம்மன்' அனுப்பியும் விசாரித்துள்ளனர்.
முகவர்களில், மோசடிக்கு முக்கிய புள்ளியாக செயல்பட்ட, 25 பேர் தலைமறைவாக இருப்பது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து, தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.
போலீசார் கூறுகையில், 'நிதி நிறுவனங்களின் மோசடிக்கு முகவர்கள் தான் மூளையாக செயல்பட்டுள்ளனர். அவர்களால் தான் லட்சக்கணக்கானோர் முதலீடு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள முகவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம்' என்றனர்.