அடிக்கடி 'விசிட்' அடிக்கும் முதலைகள்; சிதம்பரம் சுற்றுவட்டாரத்தில் மக்கள் பீதி
அடிக்கடி 'விசிட்' அடிக்கும் முதலைகள்; சிதம்பரம் சுற்றுவட்டாரத்தில் மக்கள் பீதி
ADDED : பிப் 25, 2025 04:17 AM

சிதம்பரம் : சிதம்பரத்தில் தோட்டத்து வீட்டிற்குள் புகுந்த மெகா சைஸ் முதலையை பார்த்து, வீட்டில் இருந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர். வனத்துறையினர் முதலையை பிடித்து, வக்காரமாரி ஏரியில் பாதுகாப்பாக விட்டனர்.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றில் ஏராளமான முதலைகள் உள்ளன. அவை, கொள்ளிடத்தில் இருந்து பிரியும் கிளை வாய்க்கால்கள் வழியாக, அவ்வப்போது வெளியேறி, அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து விடுகின்றன.
முதலைகள், சில நேரங்களில் ஆற்றில் குளிக்கச் செல்லும் பொதுமக்களை கடித்து, இழுத்துச் செல்வதும், கால்நடைகளை விழுங்குவதும் வாடிக்கை.
அப்படி ஊருக்குள் புகும் முதலைகளை வனத்துறையினர் பிடித்து, சிதம்பரத்திற்கு குடிநீர் வழங்கும் வக்காரமாரி ஏரியில் விடுகின்றனர். அந்த வகையில், சிதம்பரம் அருகே அம்மாப்பேட்டை கிராமத்திற்குள் நேற்று முன்தினம் நள்ளிரவு, 1:00 மணியளவில் 13 அடி நீளமும், 550 கிலோ எடையும் கொண்ட மெகா சைஸ் முதலை ஒன்று புகுந்தது.
முதலை, தோப்பு தெருவில் சம்பந்தமூர்த்தி என்பவரது தோட்டத்து வீட்டிற்குள் புகுந்து, அங்கு கட்டியிருந்த கால்நடைகளை கடிக்க முயன்றது. முதலையை பார்த்து, மாடு, கன்றுக்குட்டிகள் அபயக்குரல் எழுப்ப, திடுக்கிட்டு எழுந்த சம்பந்தமூர்த்தி குடும்பத்தினர், தோட்டத்திற்கு சென்று பார்த்தனர்.
அப்போது, அங்கு மெகா சைஸ் முதலை இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து, வீட்டில் இருந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர். பின்னர், கிராமத்தினர் அங்கு திரண்டனர். வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சிதம்பரம் வனச்சரகர் வசந்த் தலைமையிலான வனத்துறையினர், நீண்ட நேரம் போராடி முதலையை லாவகமாக பிடித்தனர். அந்த முதலை பாதுகாப்பாக வக்காரமாரி ஏரியில் விடப்பட்டது.