விநாயகர் சிலை அமைப்பாளர்கள் திடீர் தர்ணா: சிதம்பரத்தில் பரபரப்பு
விநாயகர் சிலை அமைப்பாளர்கள் திடீர் தர்ணா: சிதம்பரத்தில் பரபரப்பு
ADDED : செப் 05, 2024 05:06 AM

சிதம்பரம்:சிதம்பரம் சப் கலெக்டர் அலுவலகம் முன் விநாயகர் சிலை அமைப்பாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
விநாயகர் சதுர்த்தி வழிகாட்டுதல் கூட்டம் நேற்று சிதம்பரம் சப் கலெக்டர் கூட்டத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இக்கூட்டத்திற்கு சிதம்பரம், புவனகிரி, ஸ்ரீமுஷ்ணம் மற்றும் காட்டுமன்னார்கோவில் தாலுகாக்களை சேர்ந்த வருவாய் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் விநாயகர் சிலை அமைப்பாளர்கள் என 200க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர்.
ஆனால், சப் கலெக்டர் அலுவலகத்தில் போதிய இட வசதி இல்லாததால், விநாயகர் சிலை அமைப்பாளர்கள் அமர இடம் இல்லாதை தொடர்ந்து, அனைவரும் சப் கலெக்டர் அலுவலகம் எதிரில் தர்ணாவில் ஈடுபட்டனர். நிலமையை உணர்ந்த போலீசார், உடன் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்தனர். கூட்டத்திற்கு சப் கலெக்டர் ராஷ்மி ராணி தலைமை தாங்கினார், டி.எஸ்.பி., க்கள் லாமேக், ரூபன்குமார் மற்றும் போலீசார் பங்கேற்றனர். கூட்டத்தில், பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை விளக்கினர்.