போலீஸ் அலட்சியத்தால் அரங்கேறும் கூட்டு பாலியல் பலாத்காரம் குற்றம் * அண்ணாமலை கண்டனம்
போலீஸ் அலட்சியத்தால் அரங்கேறும் கூட்டு பாலியல் பலாத்காரம் குற்றம் * அண்ணாமலை கண்டனம்
ADDED : ஆக 14, 2024 10:01 PM
சென்னை:'குற்றங்களில் ஈடுபடுபவர்கள் தி.மு.க.,வினர் என்பதாலேயே, போலீசாரும் கண்டுகொள்ளாமல் இருப்பதால், கூட்டு பாலியல் பலாத்காரம் போன்ற மோசமான குற்றம், தமிழகத்தில் அரங்கேறி இருக்கிறது' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே கஞ்சா போதையில் இருந்த நான்கு பேர், இளம் பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். தி.மு.க.,வை சேர்ந்த உதயநிதி ரசிகர் மன்ற நிர்வாகி கவிதாசன் உள்ளிட்ட நான்கு பேரை, காவல் துறை கைது செய்திருக்கிறது.
தமிழகம் முழுதும் பெருகி இருக்கும் போதை கலாசாரம், பெரும் குற்றங்களுக்கு வழிவகுத்துக் கொண்டிருக்கிறது. குற்றங்களில் ஈடுபடுபவர்கள், தி.மு.க.,வை சேர்ந்தவர்கள் என்பதாலேயே, போலீசாரும் கண்டுகொள்ளாமல் இருப்பதால், கூட்டு பாலியல் பலாத்காரம் போன்ற மிக மோசமான குற்றம், தமிழகத்தில் அரங்கேறி இருக்கிறது.
போதை பொருள் புழக்கத்தையும் கட்டுப்படுத்த இயலாமல், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கையும் எடுக்க முடியாமல், தமிழக காவல் துறையின் கைகள் கட்டப்பட்டு உள்ளன. போதை பொருள் புழக்கத்திற்கும், ஆளுங்கட்சியினர் என்பதற்காக குற்றங்களை கண்டுகொள்ளாமல் இருப்பதற்கும், ஒரு சமூகமாக நாம் கொடுத்து கொண்டிருக்கும் விலை மிக பெரியது என்பதை, முதல்வர் எப்போது உணருவார்?
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அவரது மற்றொரு அறிக்கை:
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள வழுதலம்பேடு கிராமத்தில், பட்டியல் சமூக மக்களை கோவிலுக்குள் செல்ல விடாமல் தடுத்த, தி.மு.க., ஊராட்சி மன்ற தலைவி மீது, வன்கொடுமை வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
காலம் காலமாக போலி சமூக நீதி நாடகமாடி, பட்டியல் சமூக மக்களை வெறும் ஓட்டு வங்கியாக மட்டுமே பபயன்படுத்தி வரும் தி.மு.க.,வின் உண்மை நிறம் அவ்வப்போது வெளிப்பட்டு கொண்டு தான் உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.