போலீஸ் சப்போர்ட் இல்லாமல் கஞ்சா பிசினஸ் நடக்க முடியாது! உயர் நீதிமன்ற மதுரை கிளை பஞ்ச்
போலீஸ் சப்போர்ட் இல்லாமல் கஞ்சா பிசினஸ் நடக்க முடியாது! உயர் நீதிமன்ற மதுரை கிளை பஞ்ச்
UPDATED : மே 09, 2024 07:57 AM
ADDED : மே 09, 2024 02:37 AM

மதுரை:'போலீஸ் உதவியின்றி கஞ்சா வியாபாரம் நடக்க வாய்ப்பு இல்லை' என, கஞ்சா விற்பனையை தடுக்கக் கோரி தாக்கல் செய்த வழக்கில், உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்து தமிழக உள்துறை செயலர், டி.ஜி.பி., உள்ளிட்டோர் பதில் அளிக்க உத்தரவிட்டனர்.
ராமநாதபுரம், திருமுருகன் தாக்கல் செய்த பொதுநல மனு:
மதுரை ஒத்தக்கடை யானைமலை பகுதியில் ஏப்., 22 ல் அய்யப்பன் நகர் பகுதியில் 7 பேர் போதைப் பொருட்கள் மற்றும் மது அருந்திய நிலையில், அப்பகுதியில் பிரச்னை செய்து, கான்முகமது என்பவரை தாக்கினர். இதுதொடர்பான வீடியோ பரவிய நிலையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
விசாரணை
ஒத்தக்கடை பகுதியில் கஞ்சா விற்பனை போலீசாருக்கு தெரிந்தே நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் மக்கள் புகார் அளிக்க முன்வருவதில்லை. ஒத்தக்கடை அய்யப்பன் நகர், நீலமேக நகர் பகுதியில் போலீஸ் அவுட் போஸ்ட் அமைக்கவும், போதைப் பொருட்கள், மது அருந்தி வாகனம் ஓட்டுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்.
கஞ்சா விற்பனை, கடத்தலில் ஈடுபடுவோரை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க சிறப்பு பிரிவு உருவாக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு தெரிவித்திருந்தார்.
நீதிபதிகள் வேல்முருகன், தனபால் அமர்வு முன் வழக்கு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், 'ஒத்தக்கடையில் நடந்த சம்பவம் கஞ்சா உபயோகித்ததால் அல்ல; மது அருந்தியதால் நடந்தது.
'மூன்று ஆண்டுகளில் கஞ்சா விற்பனை தொடர்பாக வெளிமாநிலங்களைச் சேர்ந்த 2,486 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது' என, தெரிவிக்கப்பட்டது.
அறிக்கை
அப்போது நீதிபதிகள் 'போலீசார் உதவியின்றி கஞ்சா வியாபாரம் நடக்க வாய்ப்பில்லை. அப்படியென்றால் கஞ்சா புழக்கமும், வழக்குகளும் எப்படி அதிகரிக்கும்' என, கேள்வி எழுப்பி, 'கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவாகியுள்ளன.
'எத்தனை வழக்குகளில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
'எத்தனை வழக்கு களில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது உள்ளிட்ட தகவல்களுடன் தமிழக உள்துறை செயலர், டி.ஜி.பி., போதைப்பொருள் தடுப்புப்பிரிவு இயக்குனர் ஆகியோர் பதில் மனுதாக்கல் செய்ய வேண்டும்' என, உத்தரவிட்டு வழக்கை மே 15க்கு ஒத்தி வைத்தனர்.