ரூ.21 கோடி 'கோக்கைன்' கடத்தல் கானா நாட்டு பெண் கைது
ரூ.21 கோடி 'கோக்கைன்' கடத்தல் கானா நாட்டு பெண் கைது
ADDED : ஜூன் 27, 2024 01:56 AM
சென்னை:விமானத்தில், 21 கோடி ரூபாய் மதிப்பிலான, 'கோக்கைன்' போதை பொருள் கடத்தி வந்த, கானா நாட்டை சேர்ந்த பெண்ணை, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்தனர்.
கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் இருந்து, நேற்று காலை விமானம் சென்னைக்கு வந்தது. அதில், கானா நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் வந்தார். அவரிடம், விசாரித்தபோது, முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். அவரது கைப்பை மற்றும், 5 ஜோடி காலணிகளை சோதித்தனர். காலணிக்கு உள்ளே, கோக்கைன் போதை பவுடர் இருந்தது. மொத்தம், 2.1 கிலோ எடையுள்ள அதன் மதிப்பு, 21 கோடி ரூபாய்.
இதையடுத்து, அந்த பெண்ணை கைது செய்த சுங்க அதிகாரிகள், போதை பொருளை பறிமுதல் செய்தனர். சர்வதேச போதை பொருள் கடத்தும் கும்பலுடன், அவருக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில், சுங்க அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
சர்வதேச போதை பொருள் தடுப்பு தினமான நேற்று, சென்னை விமான நிலையத்தில், 21 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.