விலை சரிவதால் அக் ஷய திருதியைக்கு தங்கம் வாங்க முன்பதிவு விறுவிறுப்பு
விலை சரிவதால் அக் ஷய திருதியைக்கு தங்கம் வாங்க முன்பதிவு விறுவிறுப்பு
ADDED : ஏப் 26, 2024 06:25 AM

சென்னை: தங்கம் விலை சற்று குறைந்துள்ளதால், அக் ஷய திருதியைக்கு தங்கம் வாங்க, தற்போது பலரும் நகைக்கடைகளில் பணம் செலுத்தி, ஆபரணங்களை முன்பதிவு செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் சிறியது, நடுத்தரம், பெரியது என, 35,000 நகை கடைகள் உள்ளன. அவற்றில் தினமும் பழைய நகையை கொடுத்து புதிதாக வாங்குவது, மொத்த பணம் கொடுத்து புதிய நகை வாங்குவது என, சராசரியாக, 10,000 கிலோ தங்க ஆபரணங்கள் விற்பனையாகின்றன.
தீபாவளி, அக் ஷய திருதியை போன்ற சுப தினங்களில் தங்கம் வாங்கினால், தங்களிடம் உள்ள செல்வம் மேலும் பெருகும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. இதனால், பலரும் அந்த நாட்களில் தங்கம் வாங்குகின்றனர்.
மொத்தமாக பணம் கொடுத்து நகை வாங்க முடியாதவர்களும், நகை கடைகளில் மாதாந்திர சேமிப்பு திட்டங்களில் சேருகின்றனர். அவர்கள் மாதம்தோறும், 500 ரூபாய், 1,000 ரூபாய் என, தங்களின் வசதிக்கு ஏற்ப பணம் சேமித்து, அதை பயன்படுத்தி சுப தினங்களில் நகை வாங்குகின்றனர்.
தற்போது, இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் உள்ளிட்ட சர்வதேச நிலவரங்களால், முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி, தங்கத்தில் அதிக முதலீடு செய்து வருகின்றனர்.
இதனால், சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் கடந்த வாரத்தில், 22 காரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் விலை, 55,000 ரூபாயை தாண்டியது.
இதுவே, தங்கம் விற்பனையில் உச்ச விலை. சில தினங்களாக தங்கம் விலை சற்று குறைந்து, நேற்று கிராம், 6,710 ரூபாய்க்கும்; சவரன், 53,680 ரூபாய்க்கும் விற்பனையானது.
அடுத்த மாதம், 10ம் தேதி அக் ஷய திருதியை வருகிறது. எனவே, அன்று தங்கம் வாங்க, தற்போது நகை கடைகளுக்கு சென்று விரும்பிய நகைகளை தேர்வு செய்து அதற்கான பணத்தை செலுத்தி, முன்பதிவு செய்து வருகின்றனர்.
இதுகுறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது:
அக் ஷய திருதியைக்கு, நகை முன்பதிவு சிறப்பாக துவங்கி இருக்கிறது; தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், தற்போது குறைந்து வருகிறது.
பலரும் அக் ஷய திருதியைக்கு தங்கம் வாங்க தற்போது, முன்பதிவு செய்து வருகின்றனர். கடந்த ஆண்டை போல, இந்த அக் ஷய திருதியைக்கும் தங்கம் விற்பனை நன்றாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

