சென்னையில் 500 மின்சார பஸ்கள் விரைவில் இயக்க அரசு திட்டம்
சென்னையில் 500 மின்சார பஸ்கள் விரைவில் இயக்க அரசு திட்டம்
ADDED : மே 04, 2024 12:14 AM
சென்னை:'அரசு போக்குவரத்து கழகங்களில், இந்த நிதி ஆண்டிற்குள், 7,030 புதிய பஸ்கள் இயக்கப்படும்' என, தமிழக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழக போக்குவரத்து துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கொரோனா காலமான, 2020 - -21 மற்றும் 2021 -- 22 கால கட்டங்களில், போக்குவரத்து கழகங்கள் எந்த வருமானமும் இல்லாமல் நிதி நெருக்கடியில் இருந்ததால், புதிய பஸ்கள் வாங்க இயலவில்லை. இதன் காரணமாக, பழைய பஸ்களின் எண்ணிக்கை அதிகமானது. 2023 டிசம்பர் நிலவரப்படி, பஸ்களின் சராசரி வயது 9.13 ஆண்டாகவும், பழைய பஸ்களின் எண்ணிக்கை 10,582 ஆகவும் அதாவது, 52.73 சதவீதமாகவும் இருந்தது.
கடந்த, 2022--23 ல் 1,000; 2023--24 ல் 1,000; 2024 -- 25 ல் 3,000; கே.எப்.டபிள்யு ஜெர்மனி வளர்ச்சி வங்கி உதவியுடன், 2,666 பஸ்கள் உட்பட 7,682 புதிய பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதுவரை, 652 புதிய பஸ்கள் இயக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள, 7,030 பஸ்களும் இந்த நிதி ஆண்டுக்குள் இயக்கப்பட்டு அதே எண்ணிக்கையில் பழைய பஸ்கள் கழிக்கப்படும்.
மேலும், மொத்த செலவு ஒப்பந்த அடிப்படையில் சென்னையில், 1,000 மின்சார பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டு, முதல்கட்டமாக, 500 மின்சார பஸ்கள் விரைவில் இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.