புதிதாக ரேஷன் கார்டு பெற்ற மீனவர்களுக்கு அரசு நிவாரணம்
புதிதாக ரேஷன் கார்டு பெற்ற மீனவர்களுக்கு அரசு நிவாரணம்
ADDED : மார் 03, 2025 06:26 AM
சென்னை: 'குடும்பத்தில் புதிதாக ரேஷன் கார்டு பெற்றவர்களுக்கும், மீன்பிடி தடை கால சலுகைகள் வழங்கப்படும்' என, மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் மீனவ குடும்பங்களுக்கு, மீன்பிடி தடை காலத்தில், நிவாரண தொகையாக, 8,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், 1.79 லட்சம் மீனவ குடும்பங்கள் பயன் பெறுகின்றன.
இந்த நிவாரணம் பெற, மத்திய அரசு வழிகாட்டுதல்படி, முழுநேர மீன்பிடி தொழிலில் ஈடுபடுபவராகவும், 18 முதல், 60 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும்.
புதிதாக ரேஷன் கார்டு பெற்ற மீனவர்களுக்கு, நிவாரணம் வழங்கப்படாமல் இருந்தது. இனிமேல் வழங்கப்படும் என்று, மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது:
பழைய ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டுமே, மீன்பிடி தடை கால நிவாரணம் வழங்கப்பட்டு வந்த நிலையில், புதிதாக திருமணம் செய்து, ரேஷன் அட்டை பெற்றவர்களும், இனி மீன்பிடி தடை கால நிவாரணம் பெறலாம்.
அத்துடன் மீனவர்களுக்கான மற்ற சலுகைகளையும் பெறலாம். அதற்கு அவர்கள், மீனவர் நலத்துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.