ADDED : மே 13, 2024 02:59 AM
சென்னை : அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியின் அறிக்கை:
தி.மு.க., அரசு பொறுப்பேற்றதில் இருந்தே, தமிழக மக்களுக்கு சோதனையான காலமாகவே இருந்து வருகிறது. விடியல் தருவதாகக் கூறிய ஸ்டாலினின் ஆட்சி, இருண்ட ஆட்சியாகவே உள்ளது. தன் மூன்றாண்டு ஆட்சியின் நினைவுப் பரிசாக, தமிழகம் முழுதும் முத்திரை கட்டணத்தை பலமடங்கு உயர்த்தியுள்ளது.
ஏற்கனவே, மூன்று ஆண்டுகளில், 3.5 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி, மக்களை கடனாளியாக்கி உள்ளது. சொத்து வரி, வீட்டுவரி, குப்பை வரி, குடிநீர் கட்டணம், மின் கட்டணம், பால்விலை உயர்வு என, மக்கள் தலையில், வரி உயர்வு சுமைகளை ஏற்றியுள்ளது.
பதிவுத் துறையில் ஏற்கனவே சேவைகளுக்கான கட்டணங்களை உயர்த்திய தி.மு.க., அரசு, தற்போது முத்திரை கட்டணத்தை பலமடங்கு உயர்த்தி, அரசாணை வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே, தி.மு.க., அரசு கொண்டு வந்த வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்பட்டது செல்லாது என, சென்னை உயர் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை, இதுவரை அமல்படுத்தவில்லை. உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு, உச்ச நீதிமன்றமும் இதுவரை தடையாணை தரவில்லை.
எனவே, பல மடங்கு முத்திரை கட்டண உயர்வுக்கான அரசாணையை உடனே திரும்பப் பெற வேண்டும். சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, வழிகாட்டு மதிப்பும், முன்பிருந்த நிலையில் தொடர வேண்டும்.
இவ்வாறு பழனிசாமி கூறியுள்ளார்.