'விக்கிரவாண்டி தேர்தல் முடிந்ததும் மின் கட்டணத்தை அரசு உயர்த்தும்'
'விக்கிரவாண்டி தேர்தல் முடிந்ததும் மின் கட்டணத்தை அரசு உயர்த்தும்'
ADDED : ஜூலை 08, 2024 05:46 PM
சென்னை:விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிந்ததும், மின் கட்டணத்தை உயர்த்த, தி.மு.க., அரசு திட்டமிட்டுள்ளதாக, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழகத்தில் இடைத்தேர்தல்கள் என்பது பணம், பரிசுப் பொருட்கள் வழங்கும் மேளாக்களாக மாறி விட்டன. விக்கிரவாண்டி தொகுதியின் பல கிராமங்களில் தி.மு.க.,வினர் வீடு வீடாக சென்று கொடுத்த பரிசுப் பொருட்களை, பொதுமக்களே கொண்டு வந்து, தி.மு.க., அலுவலகங்களில் வீசி விட்டு செல்வது, எந்த இடைத்தேர்தலிலும் நடக்காத அதிசயம்.
சட்டம் - ஒழுங்கு சீரழிவு, விலைவாசி உயர்வு, ரேஷனில் பருப்பு, பாமாயில் வழங்காதது, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மறுப்பது, வன்னியர் இடஒதுக்கீட்டை வழங்காமல் ஏமாற்றுவது என, தி.மு.க., அரசின் வேதனை பட்டியல் நீள்கிறது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிந்ததும், மின் கட்டணத்தை 4.38 சதவீதம் உயர்த்த, தி.மு.க., அரசு முடிவு செய்துள்ளது. பண பலத்தையும், படை பலத்தையும் பயன்படுத்தி, லோக்சபா தேர்தலில் பெற்ற வெற்றியால், தி.மு.க., அதிகார திமிரின் உச்சத்தில் உள்ளது.
அதனால், மக்கள் விரோத திட்டங்களை திணிக்கத் துடித்துக் கொண்டிருக்கிறது. இதை தடுக்க, விக்கிரவாண்டியில் தி.மு.க.,வை வீழ்த்தி, அதிர்ச்சி வைத்தியம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.