நுாலகங்களுக்கு சென்று கவர்னர் நேரில் ஆய்வு செய்யலாம்: மகேஷ்
நுாலகங்களுக்கு சென்று கவர்னர் நேரில் ஆய்வு செய்யலாம்: மகேஷ்
ADDED : செப் 03, 2024 01:38 AM

திருச்சி: 'தமிழக அரசின் பாடத் திட்டம் அவ்வளவு துாரம் தகுதியானது அல்ல' என தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கூறியிருந்தார். அதற்கு பதில் அளிக்கும் வகையில், திருச்சியில் நேற்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அளித்த பேட்டி:
மத்திய அரசின் சமக்ர சிக்ஷான் திட்டத்துக்கு, ஆண்டுதோறும் 60 சதவீதம் நிதியை மத்திய அரசு வழங்கும். இந்த ஆண்டுக்கான 2,152 கோடி ரூபாயில் முதல் தவணையாக 573 கோடி ரூபாயை, கடந்த ஜூன் மாதமே வழங்கி இருக்க வேண்டும்.
இதுவரை அந்த நிதியை வழங்காததால், பள்ளிக் குழந்தைகளின் கல்வித் தரமும், 15,000த்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கான ஊதியமும் கேள்விக் குறியாகும்.
அதிகாரிகள் தரப்பில் பலமுறை கடிதம் எழுதிய போதிலும், தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான், மத்திய அரசின் நிதி கிடைக்கும் என்ற நிலை தான் நீடிக்கிறது. தமிழக முதல்வரின் வழிகாட்டுதல்படி அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும்.
தமிழகத்தில் உள்ள 180 தொகுதிகளில் ஆய்வு செய்திருக்கிறேன். அங்குள்ள நுாலகங்களில், டி.என்.பி.எஸ்.சி., மற்றும் யு.பி.எஸ்.சி., போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்பவர்கள், தமிழக அரசின் 6 முதல் பிளஸ் 2 வகுப்பு பாடப் புத்தகங்களில் இருந்து தான் அதிகமான கேள்விகள் கேட்பதாக தெரிவிக்கின்றனர். அதனால், இன்னும் கூடுதலான புத்தகங்கள் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.
சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் என்ன இருக்கிறதோ, அது தான் மாநில அரசின் பாடத்திட்டத்திலும் இருக்கிறது. ஆனால், மத்திய அரசின் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் உயர்ந்தது போலவும், தமிழக அரசின் பாடத்திட்டம் குறைந்தது போலவும் தமிழக கவர்னர் ரவி பேசி வருகிறார்.
அது தவறு. தேவையானால், தமிழக கவர்னரே நுாலகங்களுக்கு சென்று, போட்டித் தேர்வு எழுதுபவர்களிடம் நேரடியாக விசாரிக்கட்டும். அப்போது, எந்த பாடத்திட்டம் சிறந்தது என்பதை அவரே தெரிந்து கொள்வார். இவ்வாறு அவர் கூறினார்.