வேகமெடுக்கும் பசுமை மின்சார கழகம் மேலாண் இயக்குனரை நியமித்தது அரசு
வேகமெடுக்கும் பசுமை மின்சார கழகம் மேலாண் இயக்குனரை நியமித்தது அரசு
ADDED : மே 11, 2024 02:14 AM

சென்னை
காற்றாலை, சூரியசக்தி மின் திட்டங்களை செயல்படுத்த, புதிதாக துவக்கப்பட்டுள்ள பசுமை மின்சார கழகத்தின் மேலாண் இயக்குனராக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி அனிஷ் சேகரை, தமிழக அரசு நியமித்துள்ளது.
தமிழக அரசு, தமிழக பசுமை மின்சார கழகம் என்ற நிறுவனத்தை, கடந்த பிப்ரவரியில் துவக்கியது. இந்நிறுவனத்தில், 'டெடா' என்ற எரிசக்தி மேம்பாட்டு முகமையும், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் உள்ள மரபுசாரா மின்சார பிரிவும் இணைக்கப்படுகின்றன.
பசுமை மின்சார கழகத்தின் கீழ், ஏற்கனவே உள்ள நீர் மின் நிலையங்கள் இடம்பெறும். சூரியசக்தி, காற்றாலை, நீரேற்று மின் திட்டம், பசுமை ஹைட்ரஜன், கடல் காற்றாலை திட்டங்கள் ஒருங்கிணைப்படும். இதுதவிர, புதுப்பிக்கத்தக்க மின் திட்டங்களுக்கு, ஒற்றைச் சாளர முறையில் அனுமதி தரும்.
தற்போது, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில், 'பொது - தனியார்' திட்டத்தின் கீழ், 11 நீரேற்று மின் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இதற்கு, தமிழக அரசும் ஒப்புதல் அளித்துள்ளது. மாவட்ட வாரியாக சூரிய சக்தி மின்சார பூங்காக்களும் அமைக்கப்பட உள்ளன.
இந்த பணிகளை பசுமை மின்சார கழகம் மேற்கொள்ள உள்ளது. அதன் தலைவராக, மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி உள்ளார். இந்நிலையில், பசுமை மின் கழக மேலாண் இயக்குனராக ஐ.ஏ.எஸ்., அதிகாரி அனிஷ் சேகரை, தமிழக அரசு நியமித்துள்ளது. இவர், சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் நேற்று பொறுப்பேற்றார்.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த அனீஷ் சேகர், 2011ல் ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெற்று, தமிழக பிரிவு அதிகாரியாக சேர்ந்தார். தமிழக அரசின், 'எல்காட்' நிறுவன மேலாண் இயக்குனராக பணியாற்றிய அவர், கடந்த மார்ச்சில் திடீரென தன் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் அளித்தார்.
தற்போது, அனிஷ் சேகர், தன் ராஜினாமாவை திரும்ப பெற்றதை அடுத்து, அவர் பசுமை மின்சார மேலாண் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.