'பிரயாஸ்' மீனா சுப்ரமணியனுக்கு அரசின் சிறந்த சமூக சேவகி விருது
'பிரயாஸ்' மீனா சுப்ரமணியனுக்கு அரசின் சிறந்த சமூக சேவகி விருது
ADDED : ஆக 16, 2024 01:48 AM

சென்னை:சென்னை பிரயாஸ் அறக்கட்டளை தலைவர் மீனா சுப்ரமணியனுக்கு, சிறந்த சமூக சேவகி விருதை, முதல்வர் ஸ்டாலின் நேற்று சுதந்திர தின விழாவில் வழங்கினார்.
பெண்கள் நலனுக்காக அவர் ஆற்றி வரும் மிகச் சிறப்பான பங்களிப்பை அங்கீகரித்து இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
விருது பெற்றது குறித்து, மீனா சுப்ரமணியன் கூறியதாவது:
இந்த அங்கீகாரம், சமூக நலன் மற்றும் பெண்கள் நலன் மீது அக்கறையுடனும், அர்ப்பணிப்புடனும் செயல்பட்டு வரும், எங்கள் குழுவின் கூட்டு முயற்சிக்கும், நன்கொடையாளர்கள் மற்றும் தன்னார்வலர்களின் இடைவிடாத ஆதரவுக்கும் மிகச் சிறந்த சான்றாகும்.
பெண்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு சுயமாக செயல்படும் வாய்ப்புகளை உருவாக்குவதிலும், பின்தங்கிய சமூகங்களை மேம்படுத்துவதிலும், தொடர்ந்து உறுதியுடன் செயல்படுவோம்.
பிரயாஸ் அறக்கட்டளை, சமூகத்தில் நலிவுற்ற, பின்தங்கிய ஆயிரக்கணக்கான தனி நபர்களுக்கு, வாழ்வாதாரத்திற்கான வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்துஉள்ளது.
அறக்கட்டளையின் மருத்துவ மையம், ஆண்டுதோறும், 60,000க்கும் மேற்பட்டோருக்கு, அத்தியாவசியமான சுகாதார சேவையை வழங்கி வருகிறது.
அதன் டயாலிசிஸ் பிரிவு, ஒவ்வொரு மாதமும், 400 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறது. கல்வி மையங்கள் வழியே மாதந்தோறும், 150 சிறுவர், சிறுமியர் பயனடைகின்றனர்.
மொபைல் பொம்மை வேன்கள், சென்னை மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியருக்கு கற்றல் வாய்ப்புகளையும், அறிவு சார்ந்த வேடிக்கையான அம்சங்களையும் வழங்கி வருகிறது.
நடமாடும் மருத்துவ நிலையங்கள், மாநகராட்சிக்கு உட்பட்ட, வசதி வாய்ப்புகள் குறைந்த மக்களுக்கு உதவி செய்து வருகிறது.
அடுத்தடுத்த முயற்சிகளை முன்னெடுத்து செல்லும் வகையில், பிரயாஸ் அறக்கட்டளை, மகளிர் சுய உதவி குழுக்களை வலுப்படுத்துவதையும், பெண்களுக்கான திறன் மேம்பாட்டு திட்டங்களை விரிவுபடுத்துவதையும் நோக்கமாக வைத்து செயல்படுகிறது.
பிரயாஸ் அறக்கட்டளை, எல் அண்டு டி ஊழியர்களின் வாழ்க்கைத் துணை மற்றும் பெண் ஊழியர்களால், அந்நிறுவன ஆதரவுடன் துவக்கப்பட்டது.
இன்று இந்தியா முழுதும், 18 செயல்பாட்டு மையங்களுடன், 20 ஆண்டுகளுக்கும் மேலாக, சமூக சேவை பணியில் முன்னணியில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.