ADDED : ஜூன் 23, 2024 11:43 PM
குளித்தலை : கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த நடுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன், 65. இவரது மகன் தேவராஜ், 50; பேக்கரி தொழிலாளி. மருமகள் ரேவதி, 47, பேரன் திருக்குமரன், 14; ஒன்பதாம் வகுப்பு படித்தார். அனைவரும் ஒரே வீட்டில் வசித்தனர்.
நேற்று காலை, 7:00 மணியளவில் வீட்டில் டேபிள் பேனை இயக்க, பிளக் பாயிண்டில் ஒயரை திருக்குமரன் சொருகினார்.
அப்போது சிறுவன் மீது மின்சாரம் பாயவே அலறி துடித்தார். சீனிவாசன் பேரனை காப்பாற்ற முயல, அவர் மீதும் மின்சாரம் பாய்ந்து, இருவரும் அலறினர்.
இதைக்கேட்டு ஓடி வந்த ரேவதி, இருவரையும் காப்பாற்ற முயன்றார். அவர் மீதும் மின்சாரம் பாய்ந்து அலறினார். அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து, மெயின் சுவிட்சை அணைத்தனர். ரேவதி உயிர் தப்பிய நிலையில், தாத்தா, பேரன் இறந்தனர்.
இதுகுறித்து லாலாப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.