கிராவல் மண் திருட்டு:கமிஷன் பிரிப்பதில் திமுக நிர்வாகிகளுக்கு இடையே தகராறு
கிராவல் மண் திருட்டு:கமிஷன் பிரிப்பதில் திமுக நிர்வாகிகளுக்கு இடையே தகராறு
ADDED : ஆக 20, 2024 09:51 PM

காங்கயம்: திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே சிவன்மலை ஆத்தா குளத்தில் வண்டல் மண் என கூறி கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான கிராவல் மண் கடத்தப்பட்ட நிலையில்,திமுக நிர்வாகிகளிடையே கமிஷன் பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் போலி பர்மிட் மூலம் மண் கடத்தியது வெளி வந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே சிவன்மலை கிரிவலப்பாதையில் 10 ஏக்கர் பரப்பளவில் ஆத்தா குளம் உள்ளது.
இக்குளம் பரம்பிக்குளம் அழியாறு பாசன கால்வாய் மூலம் தண்ணீர் நிரப்பப்பட்டு, அருகில் உள்ள 100க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களுக்கும், போர்வெல், கிணறுகளுக்கு நீர் ஆதாரமாக விளங்கி வந்தது.
தற்போது அரசு குளங்களை தூர் வார ஏதுவாக அரசுக்கு சொந்தமான குளங்களில் இருக்கும் வண்டல் மண்ணை விவசாயிகள் உரிய ஆவணங்களை காட்டி இலவசமாக வண்டல் மண்ணை எடுத்து கொள்ளலாம் என தெரிவித்தது.
இதையொட்டி தமிழகம் முழுவதும் குளங்களில் உள்ள வண்டல் மண் எடுக்கப்பட்டு வரும் நிலையில்,சிவன்மலை ஆத்தாகுளம் மற்றும் சாவடிபாளையம் ஆகிய குளங்களில் வண்டல் மண்ணே இல்லாத நிலையில், வண்டல் மண் எடுப்பதாக கூறி தினமும் 100க்கும் மேற்பட்ட லாரிகளில் சட்ட விரோதமாக கிராவல் மண் எடுக்கப்பட்டு, அவைகள் ஒரு லோடு ரூ. 2500 முதல் 4000 ரூபாய் வரை வெளி சந்தை மற்றும் ரியல் எஸ்டேட் கும்பலுக்கு விற்பதாகவும்,
இதனால் அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளது.
ஆத்தா குளத்தில் சுமார் 2 மீட்டர் ஆழத்தில் 500மீட்டர் சுற்றளவில் கிராவல் மண் எடுக்கப்பட்டது.
இந்நிலையில் சிவன்மலை ஆத்தா குளத்தில் கிராவல் மண் கடத்தலுக்கு காங்கேயம் தெற்கு ஒன்றிய திமுக துணை செயலாளரின் கணவருக்கு சொந்தமான லாரிகளும், அவரது ஆதரவாளரின் லாரிகளுமே இயக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர் வேறு கிராமம் (பாப்பினி) பகுதியை சேர்ந்தவர் என்பதால் உள்ளூர் திமுக நிர்வாகிகளை கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த திமுக நிர்வாகி மில்கா கந்தசாமி என்பவர் இன்று குளத்திற்கு சென்று லாரிகளை தனது டயோட்டா காரை மறித்து நிறுத்தி
உள்ளூர் நிர்வாகிக்கு கொடுக்க வேண்டியதை கொடுக்காமல் எப்படி லோடு அடிக்கிறாய் என கேட்டு தகராறு செய்துள்ளார்.
பின் காங்கயம் தாசில்தார் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை செய்த போது அனுமதி இல்லாமல் மண் எடுத்தது தெரியவந்தது.
மேலும் லாரிகளை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்காமல் தாசில்தாரும், வட்டார வளர்ச்சி அதிகாரியும் 2 நாட்களுக்கு மண் எடுக்க வேண்டாம் என கூறி சென்றதாக கூறப்படுகிறது.
மேலும் காங்கயம் பகுதியில் வண்டல் மண் என கூறி கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான கிராவல் மண் கடத்தப்பட்டது குறித்து கலெக்டர் தலைமையில் விசாரணை அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.