ADDED : ஏப் 22, 2024 06:29 AM

சென்னை : 'தி.மு.க.,வின் சர்வாதிகாரப் போக்கு, ஜனநாயகத்துக்கு மிகுந்த ஆபத்தானது' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: கடலுார் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த கோமதி என்பவர், ஓட்டுப் பதிவு நாளன்று, குடும்பத்தினர் கண்முன், தி.மு.க.,வினரால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி, மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
தேர்தலில், தங்கள் கூட்டணிக்கு ஓட்டளிக்கவில்லை என்பதற்காக, தி.மு.க.,வினர் இந்தப் பாதகச் செயலை செய்திருப்பதாக, ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இந்தக் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட தி.மு.க.,வினரை, தி.மு.க., அரசு இன்னும் கைது செய்ததாகத் தெரியவில்லை.
அரசியலமைப்புச் சட்டம், குடிமக்களுக்கு வழங்கியிருக்கும் அடிப்படை உரிமையான ஓட்டளிக்கும் உரிமையைக்கூட, தங்கள் விருப்பப்படி தான் நடத்த வேண்டும் என்ற, தி.மு.க.,வின் சர்வாதிகாரப் போக்கு, ஜனநாயகத்துக்கு மிகுந்த ஆபத்தானது.
இந்தியாவைக் காப்பாற்றப் போவதாகக் கனவு கண்டு கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின், முதலில் தன் கட்சிக்காரர்களிடம் இருந்து, தமிழக மக்களை காப்பாற்றும் வேலையைப் பார்க்க வேண்டும். உடனடியாக, இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டவர்களை கைது செய்து, கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இவ்வாறு, அண்ணாமலை கூறியுள்ளார்.

