ADDED : ஜூன் 06, 2024 07:13 AM

திருப்பூர் : மூன்றாவது முறையாக பிரதமர் பொறுப்பேற்க உள்ள மோடிக்கு, ஹிந்து முன்னணி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது.
இதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை: மோடியின் தலைமை பண்பால் உலக அரங்கில் பாரதம் தலைநிமிர்ந்து நிற்பதை கண்டு மக்கள் பெருமிதம் கொண்டனர். மூன்றாவது முறையாக தொடர்ந்து ஆட்சி செலுத்த மக்கள் அளித்த அங்கீகாரம் வரலாற்றில், பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும். வரும் ஐந்தாண்டுக்கான ஆட்சி காலம் மக்களிடம் இன்னும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பசுவதை தடை சட்டத்தை நாடு முழுவதிலும் அமல்படுத்தி, கால்நடை உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்த வேண்டும். இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள் தங்கள் வழிபாட்டு தலங்களை தாங்களே நிர்வகிப்பது போல, ஹிந்து வழிபாட்டுதலங்களும் அரசின் பிடியில் இல்லாமல், தனித்து இயங்கும் வாரியம் அமைக்கப்பட வேண்டும்.
நாடு முழுவதும் கட்டாய மதமாற்ற தடை சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். பகுத்தறிவு என்ற பெயரால், ஹிந்துக்களின் உணர்வுகளை இழிவுபடுத்திடுவோரை கடுமையான சட்ட நடைமுறைகள் மூலம் தண்டிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை தேச நலனுக்காக ஹிந்து முன்னணி சார்பில் முன்வைக்கிறோம்.
தேசம் இன்னமும் வலிமையான வளமான வளர்ச்சி பாதையில் செல்லும் நம்பிக்கையுடன் மோடிக்கு நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.