ADDED : செப் 03, 2024 12:49 AM
சென்னை: தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய, 'குரூப் - 1' தேர்வு முடிவு நேற்று வெளியானது.
டி.என்.பி.எஸ்.சி., என்ற தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம், அரசு பணியாளர்களுக்கான தேர்வுகளை நடத்துகிறது. அந்த வகையில், பல்வேறு துறைகளில் காலியாக உள்ள அதிகாரிகள் நிலையிலான, 90 பணியிடங்களுக்கான குரூப் - 1 தேர்வு குறித்த அறிவிப்பு, கடந்த மார்ச் 28ல் வெளியானது.
இதற்கான முதல்நிலை தேர்வுகள், ஜூலை 13ல் நடந்தன.
அவற்றில் தேர்ச்சி பெற்ற, 1,907 பேரின் விபரங்களை, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஜான் லுாயிஸ் நேற்று, http://www.tnpsc.gov.in என்ற டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிட்டார்.
இதில் தேர்ச்சி பெற்றோர், டிச., 10 முதல் 13ம் தேதி வரை, சென்னையில் நடக்க உள்ள முதன்மை தேர்வில் பங்கேற்கலாம்.
அதற்கு, வரும் 6 முதல் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.