90 காலி பணியிடம் நிரப்ப 'குரூப் - 1' தேர்வு அறிவிப்பு
90 காலி பணியிடம் நிரப்ப 'குரூப் - 1' தேர்வு அறிவிப்பு
ADDED : மார் 28, 2024 10:00 PM
சென்னை:துணை கலெக்டர், போலீஸ் டி.எஸ்.பி., உள்ளிட்ட ஏழு பதவிகளில், 90 காலி பணியிடங்களை நிரப்ப, 'குரூப் - 1' தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
குரூப் - 1 பதவிகளுக்கான முதல் நிலை தகுதி தேர்வு விபரங்களை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நேற்று வெளியிட்டது.
இதன்படி, ஜூலை 13ம் தேதி, காலை 9:30 முதல், 12:30 மணி வரை நடக்கிறது.
தேர்வில் பங்கேற்க விரும்புவோருக்கு, www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில், நேற்று முதல் விண்ணப்ப பதிவு துவங்கியுள்ளது. வரும், 27ம் தேதி வரை பதிவு செய்ய அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
காலியிட விபரம்
துணை கலெக்டர் 16; போலீஸ் டி.எஸ்.பி., 23; வணிக வரி உதவி கமிஷனர் 14; கூட்டுறவு சங்க துணை பதிவாளர் 21; ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் 14.
120 தேர்ச்சி மதிப்பெண்
மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி மற்றும் மாவட்ட தீயணைப்பு, மீட்பு பணிகள் துறை அதிகாரி, 1 என, 90 காலி பணியிடங்கள், இந்த தேர்வின் வழியே நிரப்பப்பட உள்ளன.
இடஒதுக்கீடு இல்லாத பிரிவில் விண்ணப்பிப்போருக்கு, 34 வயது நிரம்பியிருக்க கூடாது. இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு, 39 வயது நிரம்பியிருக்க கூடாது.
முதல் நிலை தகுதித்தேர்வு, 3 மணி நேரம் நடக்கும். பட்டப்படிப்பு தரத்தில், பொது படிப்பில் இருந்து, 175 கேள்விகளும், சிந்தனை திறன் சோதிக்கும் வகையில், 10ம் வகுப்பு தரத்தில், 25 கேள்விகளும் என, 200 கேள்விகள், 300 மதிப்பெண்களுக்கு இடம் பெறும்.
இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 90, மற்றவர்களுக்கு 120 தேர்ச்சி மதிப்பெண்ணாக கணக்கிடப்படும். தேர்ச்சி பெறுவோர், பிரதான தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.
அதில் தேர்ச்சி பெறுவோருக்கு இறுதியாக நேர்காணல் நடத்தப்படும். தேர்வு குறித்த கூடுதல் விபரங்களை, டி.என்.பி.எஸ்.சி.,யின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

