போலீஸ் குறித்து அவதுாறு வீடியோ வெளியிட்ட பெண் மீது குண்டாஸ்
போலீஸ் குறித்து அவதுாறு வீடியோ வெளியிட்ட பெண் மீது குண்டாஸ்
ADDED : ஜூன் 02, 2024 11:13 PM

கோவை: கோவை, ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் விஷ்வதர்ஷினி, 44. இவருக்கு, பேஸ்புக் வாயிலாக, கோவை, சேரன் மாநகரை சேர்ந்த செலினா என்பவருடன், பழக்கம் ஏற்பட்டது. தான் நடத்தி வரும், 'டைகர்வே' அறக்கட்டளையில் முதலீடு செய்தால், பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாகக் கூறி அவரிடம், 50,000 ரூபாய் பெற்றார்.
பணத்தை திரும்ப கேட்டபோது, பேஸ்புக்கில், செலினா குறித்து ஆபாசமாகவும், அவதுாறாகவும் பதிவிட்டு, கொலை மிரட்டல் விடுத்தார்.
புகாரின்படி, செல்வபுரம் போலீசார் வழக்கு பதிந்து, விஷ்வதர்ஷினியை சிறையில் அடைத்தனர்.
இதுதவிர, போலீசார் குறித்து அவதுாறாகவும், பொது மக்களை போலீசாருக்கு எதிராக துாண்டும் விதமாகவும் பேசி, வீடியோ ஒன்றை பதிவிட்டார். செல்வபுரம் போலீஸ் எஸ்.ஐ., புகாரின்படி, வழக்கு பதியப்பட்டு, விஷ்வதர்ஷினி சிறையில் அடைக்கப்பட்டார்.
விஷ்வதர்ஷினி, ஜனவரியில் துடியலுார் போலீசாரை ஆபாசமாக பேசி பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும், மற்றொரு வழக்கில், 2020ல், சமூக வலைதளத்தில் நண்பர் போல நடித்து, பிரகாஷ் ஸ்வாமி என்ற பத்திரிகையாளரை, முகநுால் பக்கத்தில் அவதுாறு பரப்பி விடுவதாக மிரட்டியதாக வழக்குகள் பதியப்பட்டன.
ஒரு சிறுமியை பற்றி, 2018ல் சமூக வலைதளத்தில் அவதுாறு பரப்பியதாகவும், பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டு, சென்னை போலீசார் பதிந்த வழக்கில், விஷ்வதர்ஷினி மூன்றாண்டு சிறை தண்டனை பெற்று உள்ளார்.
இந்நிலையில், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள விஷ்வதர்ஷினியிடம் வழங்கப்பட்டது.