ADDED : செப் 15, 2024 12:24 AM
சென்னை:'தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று, 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மையத்தின் இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட அறிக்கை:
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, வரும் 20ம் தேதி வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.
தமிழகத்தில் இன்று அதிகபட்ச வெப்பநிலை, ஓரிரு இடங்களில் இயல்பை விட, 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.
அதிக வெப்பநிலை, அதிக ஈரப்பதம் இருக்கும் போது, ஓரிரு இடங்களில் அசவுகரியம் ஏற்படலாம்.
கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவியது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, வால்பாறையில், 1 செ.மீ., மழை பதிவானது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.