ADDED : ஜூன் 24, 2024 11:58 PM

சென்னை: ''வெப்ப அலை பாதிப்பிற்கு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கவும், உரிய நிவாரணம் வழங்கவும், வெப்ப அலை வீச்சு, மாநில பேரிடராக அறிவிக்கப்படும்,'' என, வருவாய் துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் அறிவித்தார்.
சட்டசபையில் அவரது அறிவிப்புகள்:
l பேரிடரின் போது பொது மக்கள், மீனவர்கள், சுற்றுலா பயணியருக்கு அபாய எச்சரிக்கை அறிவிப்பு செய்ய, 13.2 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 1,000 ஒலி எழுப்பும் முன்னெச்சரிக்கை அமைப்புகள் நிறுவப்படும். மீட்பு பணிகளுக்கு, 105 கோடி ரூபாய் செலவில், படகுகள், மீட்பு உபகரணங்கள் வாங்கப்படும்
l பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் அமைந்துள்ள 121 கிராமங்களில் உள்ள தன்னார்வலர்களுக்கு, பேரிடர் மீட்பு பயிற்சி வழங்கப்படும்
l பருவ நிலை மாற்றத்தால், கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், பல இடங்களில் வெப்ப அலை வீசியது. எனவே, வெப்ப அலை பாதிப்பிற்கு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கவும், உரிய நிவாரணம் வழங்கவும், வெப்ப அலை வீச்சு, மாநில பேரிடராக அறிவிக்கப்படும்
l நவீன நில அளவை கருவியை பயன்படுத்தி, பராமரிப்பு நில அளவை செய்து, பொது மக்களுக்கு பட்டா வழங்கப்படும். பதிவு துறையில் வழங்கப்படும் வில்லங்க சான்றிதழ் போன்று, பட்டா மாற்ற விபரங்களை அறிக்கையாக பதிவிறக்கம் செய்யும் வசதி ஏற்படுத்தப்படும்
l மதுரை, கோவையில் மண்டல அளவிலான நில அளவை பயிற்சி மையங்கள் நிறுவப்படும்.
இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.