ADDED : மே 04, 2024 08:40 PM
சென்னை:அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் காலம் நேற்று துவங்கியது.
'வட மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசும். அதிகபட்ச வெப்பநிலை, 3 முதல் 5 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்கும். அதேநேரம், ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யலாம்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
மையத்தின் இயக்குனர் செந்தாமரை கண்ணன் அறிவிப்பு:
தமிழகத்தில் உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில், நேற்று இயல்பை விட, 2 முதல் 4 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் அதிகமாக இருந்தது. அதிகபட்சமாக ஈரோடில் 43.4 டிகிரி செல்ஷியஸ், அதாவது 110.12 டிகிரி வெயில் வாட்டியது.
அதற்கு அடுத்தபடியாக கரூர் பரமத்தி, வேலுார் மற்றும் திருத்தணியில் 42.5; திருப்பத்துாரில் 42; மதுரை நகரில் 41.2; திருச்சியில் 40.7; சேலத்தில் 40.5; தர்மபுரி, சென்னை மீனம்பாக்கம் மற்றும் பாளையங்கோட்டையில் 40.2 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது.
இன்று முதல் 8ம் தேதி வரை, உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.
அதற்கு அடுத்த இரண்டு தினங்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்ஷியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும். இன்று வட மாவட்டங்களில், ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை விட 3 முதல் 5 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்கும்.
ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். அதிக வெப்பநிலை, அதிக ஈரப்பதம் இருக்கும் போது, தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், ஓரிரு இடங்களில் அசவுகரியம் ஏற்படலாம்.
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்; அதிகபட்ச வெப்பநிலை 39 - 40 டிகிரி செல்ஷியசை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 - 30 டிகிரி செல்ஷியசை ஒட்டியும் இருக்கக்கூடும்.
தென் மாநிலங்களின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.
நாளை மறுதினம், தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், நீலகிரி மாவட்டம் கிளன்மார்கன் பகுதியில் 3 செ.மீ., சாந்தி விஜயா பள்ளி பகுதியில் 2; கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஜமுனாமரத்துார் பகுதியில் தலா 1 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கத்திரி வெயில் நேற்று துவங்கியதையடுத்து, வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மக்கள் வீடுகளில் முடங்கினர்.