ADDED : ஏப் 26, 2024 01:18 AM
சென்னை:தமிழகம், புதுச்சேரியில், ஒரு வாரமாக வெப்ப அலையின் தாக்கம் இருந்ததால், தினமும் வெப்ப அலை மற்றும் அனல் காற்று குறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து வந்தது.
நேற்று இந்த எச்சரிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. வரும் நாட்களில் வெப்ப அலை இருந்தால், தேவைப்படும் போது அறிவிக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
சில மாவட்டங்களில், இன்று முதல் வரும் 29ம் தேதி வரையில், அதிகபட்ச வெப்பநிலை 42 டிகிரி செல்ஷியஸ் வரை பதிவாகும், சில இடங்களில், இயல்பு அளவில் இருந்து, 4 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக வெப்பம் பதிவாகும்.
நேற்று மாலை நிலவரப்படி, அதிகபட்சமாக, திருப்பத்துார், சேலம், கரூர் பரமத்தி மற்றும் ஈரோட்டில், 42 டிகிரி செல்ஷியஸ், அதாவது, 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
பாளையங்கோட்டை, தஞ்சாவூர், 38; மதுரை விமான நிலையம், கோவை, நாமக்கல், திருச்சி, வேலுார், 40; தர்மபுரி, 41 டிகிரி செல்ஷியஸ் பதிவானது. சென்னை மீனம்பாக்கம் பகுதியில், கடந்த ஒரு வாரத்துக்கு பின், 100 டிகிரி பாரன்ஹீட்டை விட நேற்று வெப்பம் குறைந்து உள்ளது.

