ADDED : ஏப் 07, 2024 05:22 AM

சென்னை: 'தமிழக உள்மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசலாம். கடலோர மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையத்தின் இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இந்தியாவின் தென்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இன்று தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும். நாளை தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும். நாளை மறுதினம் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.
வெப்ப அலை
தமிழகத்தின் வட உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று வெப்ப அலை வீசக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் போது, ஓரிரு இடங்களில் அசவுகரியம் ஏற்படலாம். அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்ஷியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும்.

