வளிமண்டல சுழற்சி நகர்வால் 14 மாவட்டங்களில் இன்று கனமழை
வளிமண்டல சுழற்சி நகர்வால் 14 மாவட்டங்களில் இன்று கனமழை
ADDED : ஆக 15, 2024 06:14 AM

சென்னை : தமிழக பகுதிகளின் மீது நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நகர துவங்கியுள்ள நிலையில், கோவை, நீலகிரி உள்ளிட்ட, 14 மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை:
மன்னார் வளைகுடா, குமரிக்கடல், இலங்கை கடலோர பகுதிகளில், கடந்த சில நாட்களாக நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, தற்போது, குமரிக்கடல் மற்றும் இலங்கை கடலோர பகுதியில் மட்டும் காணப்படுகிறது. இது, கிழக்கில் இருந்து வீசும் காற்றின் தாக்கத்தால், மேற்கு நோக்கி அரபிக்கடலுக்கு நகர வாய்ப்புள்ளது.
இதே சமயத்தில், கேரள கடலோர பகுதியில், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது. இந்த சுழற்சி லட்சத்தீவு, மாலத்தீவு இடையே செல்ல வாய்ப்புள்ளது.
இதன் காரணமாக, தமிழகத்தின் தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்கள், கேரள பகுதிகளில் கனமழை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால், தமிழகத்தின் பெரும்பாலான இடங்கள், புதுச்சேரியில் ஒருசில இடங்களில், இன்று இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், கோவை ஆகிய, 14 மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை, நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, கடலுார், விழுப்புரம், அரியலுார், பெரம்பலுார், ராமநாதபுரம், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதைத் தொடர்ந்து, ஆக., 17, 18லும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில், மிதமான மழையும் தொடர வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த இரண்டு நாட்களுக்கு, வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும்; ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
மன்னார் வளைகுடா, தமிழக தென்கடலோர பகுதிகள், குமரிக்கடல் பகுதிகளில், ஆக., 18 வரை மணிக்கு, 45 கி.மீ., வேகத்திலும் இடையிடையே, 55 கி.மீ., வேகத்திலும், சூறாவளிக் காற்று வீசக்கூடும்.
தென்மேற்கு வங்கக்கடலின் வடக்கு பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் மணிக்கு, 45 கி.மீ., வேகத்திலும்; இடையிடையே, 55 கி.மீ., வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால், இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.