ADDED : மே 13, 2024 06:44 AM

சென்னை : வளிமண்டல கீழடுக்கில், காற்றின் திசை மாறுபாட்டால், தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
இது தொடர்பாக, அந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கில், காற்றின் திசை மாறுபாடு காணப்படுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
பலத்த காற்று
அதன் தொடர்ச்சியாக, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யலாம்.
தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி, காரைக்காலின் ஓரிரு இடங்களில், இன்று இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில், மே 15ல் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
மே 16ல், நீலகிரி, கோவை, திருப்பூர், கரூர், நாமக்கல், சேலம், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டமாக காணப்படும்.
3 டிகிரி செல்ஷியஸ்
சில இடங்களில் லேசான மழை பெய்யலாம். இருப்பினும், தமிழக உள் மாவட்டங்களில் பல இடங்களில், பகல் நேர வெப்பநிலை இயல்பைவிட, 3 டிகிரி செல்ஷியஸ் கூடுதலாக பதிவாகும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
6 நகரங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் நேற்று மாலை நிலவரப்படி, ஈரோடு, கரூர் பரமத்தி ஆகிய இடங்களில், அதிகபட்சமாக, 105 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 40.5 டிகிரி செல்ஷியசுக்கு மேல் வெப்பம் பதிவானது. இதற்கு அடுத்தபடியாக வேலுாரில், 104 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 40.2 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் நிலவியது. நாமக்கல், திருத்தணி, திருச்சி நகரங்களிலும் வெயில், 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் அதாவது, 38 டிகிரி செல்ஷியசுக்கு மேலாக வெப்பம் பதிவானது.