மணல் திருட்டு வழக்கில் ஜாமின் உயர்நீதிமன்றம் நிபந்தனை
மணல் திருட்டு வழக்கில் ஜாமின் உயர்நீதிமன்றம் நிபந்தனை
ADDED : மே 10, 2024 05:58 AM
மதுரை: மணல் திருட்டு வழக்கில் 3 பேருக்கு ஜாமின் அனுமதித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மாவட்ட கனிமவள அறக்கட்டளைக்கு ரூ.75 ஆயிரம் செலுத்த நிபந்தனை விதித்தது.
மாட்டு வண்டி மூலம் சட்டவிரோதமாக ஆற்று மணல் திருட்டில் ஈடுபட்டதாக ஆண்டிசாமி என்பவர் மீது தஞ்சாவூர் மாவட்டம் திருச்சிற்றம்பலம் போலீசார் வழக்கு பதிந்தனர். இதுபோன்ற சம்பவத்தில் லாரி டிரைவர் கந்தவேல் மீது கரூர் மாவட்டம் வாங்கல் போலீசார் வழக்கு பதிந்தனர். ஓடையிலிருந்து மணலை திருடியதாக மணிகண்டன் என்பவர் மீது திருநெல்வேலி மாவட்டம் பழவூர் போலீசார் வழக்கு பதிந்தனர். கைதான 3 பேரும் உயர்நீதிமன்றக் கிளையில் ஜாமின் மனு தாக்கல் செய்தனர்.
நீதிபதி அப்துல் குத்துாஸ் விசாரித்தார்.
அரசு தரப்பு: விசாரணை முடிவடையவில்லை. ஜாமின் அனுமதிக்கக்கூடாது.
நீதிபதி: ஜாமின் அனுமதிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட கீழமை நீதிமன்றங்களில் ஜாமின் உத்தரவாதம் தாக்கல் செய்ய வேண்டும். போலீசில் ஆஜராக வேண்டும்.
ஆண்டிசாமி ரூ.15 ஆயிரம், கந்தவேல் ரூ.40 ஆயிரம், மணிகண்டன் ரூ.20 ஆயிரம் திரும்பப் பெற முடியாத டிபாசிட் தொகையை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தலைமையிலான கனிமவள அறக்கட்டளைக்கு செலுத்த வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.