டூவீலர் தீ வைப்பு பிரச்னையில் முன்ஜாமின் புற்றுநோய் மையத்திற்கு ரூ.20 ஆயிரம் உயர்நீதிமன்றம் நிபந்தனை
டூவீலர் தீ வைப்பு பிரச்னையில் முன்ஜாமின் புற்றுநோய் மையத்திற்கு ரூ.20 ஆயிரம் உயர்நீதிமன்றம் நிபந்தனை
ADDED : மே 11, 2024 06:06 AM
மதுரை: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் நிலத்தகராறில் சகோதரரின் டூவீலருக்கு தீ வைத்ததில் ஏற்பட்ட முன்விரோத பிரச்னை தொடர்பான வழக்கில் ஒருவருக்கு முன்ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை புற்றுநோய் மையத்திற்கு ரூ.20 ஆயிரம் செலுத்த நிபந்தனை விதித்தது.
அறந்தாங்கி சித்திரவேல். இவருக்கும் அவரது சகோதரருக்கும் இடையே நிலத்தகராறு ஏற்பட்டது. முன்விரோதத்தில் சகோதரருக்கு சொந்தமான டூவீலரை தீ வைத்து சித்திரவேல் எரித்தார். புதிய டூவீலர் வாங்கித் தருவதாக சித்திரவேல் ஒப்புக்கொண்டார்.
அதன்படி வாங்கித்தரவில்லை. இதனால் சகோதரர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. சகோதரர் மற்றும் அவரது மனைவியை மிரட்டியதாக சித்திரவேல் மீது அறந்தாங்கி போலீசார் வழக்கு பதிந்தனர். அவர் உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் மனு தாக்கல் செய்தார்.
நீதிபதி அப்துல் குத்துாஸ் விசாரித்தார்.
மனுதாரர் தரப்பு: மனுதாரர் அப்பாவி. எவ்வித சம்பவத்திலும் ஈடுபடவில்லை.
அரசு தரப்பு: மனுதாரருக்கு எதிராக ஏற்கனவே ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. இவ்வாறு விவாதம் நடந்தது.
நீதிபதி: முன்ஜாமின் அனுமதிக்கப்படுகிறது. அறந்தாங்கி நீதிமன்றத்தில் ஜாமின் உத்தரவாதம் தாக்கல் செய்ய வேண்டும். திரும்பப் பெற முடியாத ரூ.20 ஆயிரம் டிபாசிட்டை சென்னை அடையாறு புற்றுநோய் மையத்திற்கு செலுத்த வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.