மேல்முறையீடு வழக்கு தொடர்ந்த தமிழக அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம் ஐகோர்ட் அதிரடி
மேல்முறையீடு வழக்கு தொடர்ந்த தமிழக அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம் ஐகோர்ட் அதிரடி
ADDED : மார் 07, 2025 11:54 PM

சென்னை: அரசு உதவி பெறும் சிறுபான்மை கல்லுாரியில், துாய்மை பணியாளர் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கிய உத்தரவை எதிர்த்து, மேல்முறையீடு செய்த தமிழக அரசுக்கு, 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை வேப்பேரியில், செயின்ட் கிறிஸ்டோபர் கல்வியியல் கல்லுாரி உள்ளது. அரசு உதவி பெறும் இந்த கல்லுாரியில், துாய்மை பணியாளராக நியமிக்கப்பட்டவரின் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், கல்லுாரி நிர்வாகம் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த தனி நீதிபதி, துாய்மைப் பணியாளர் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்க, தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனு, நீதிபதிகள்ஆர்.சுப்ரமணியன், ஜி.அருள்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. கல்லுாரி சார்பில் வழக்கறிஞர் பி.காட்சன் சுவாமிநாதன் ஆஜரானார்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
தமிழ்நாடு தனியார் கல்லுாரிகள் ஒழுங்குமுறை விதிகளின்படி, அரசு உதவி பெறும் கல்லுாரிகள் மேற்கொள்ளும் நியமனங்களுக்கு, அரசு உதவி வழங்க வேண்டும்.
ஆனால், துாய்மை பணியாளர்கள் உள்ளிட்ட, 'குரூப் - டி' பணியிடங்களுக்கு, சுயநிதி கல்லுாரிகள் நிரந்தர பணியாளர்களை நியமிப்பதை தடுக்கும் வகையில், ஒப்பந்த தொழிலாளர்களை நியமிக்கக் கூறி, 2013ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இந்த அரசாணையை, இந்த நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. உச்ச நீதிமன்றமும், இந்த நீதிமன்ற உத்தரவை உறுதி செய்துள்ளது. இருப்பினும், தமிழக அரசு தேவையில்லாமல், இந்த மேல்முறையீட்டு வழக்கை தாக்கல் செய்துள்ளது.
ஏற்கனவே தீர்வு காணப்பட்ட விவகாரத்தில், மீண்டும் மேல்முறையீடு செய்த மாநில அரசுக்கு, 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்த அபராத தொகையில், 2.50 லட்சம் ரூபாயை, கல்லுாரியில் துாய்மைப் பணியாளராக நியமிக்கப்பட்டவருக்கும், மீதித்தொகையை சென்னை உயர் நீதிமன்ற சட்டப் பணிகள் ஆணைக் குழுவுக்கும், 15 நாட்களில் செலுத்த வேண்டும்.
தனி துாய்மை பணியாளர் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கும்படி, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை, மாநில அரசு நான்கு வாரங்களில் அமல்படுத்த வேண்டும். அபராதத்தொகை செலுத்தப்பட்டது குறித்து, மார்ச் 20ம் தேதி அறிக்கை அளிக்க வேண்டும்.
அரசு உதவி பெறும் கல்லுாரிகளில் நியமனங்களை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் அரசுக்கு உள்ளது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், ஏற்கனவே நடைமுறையில் உள்ள விதிகளுக்கு முரணான நிர்வாக உத்தரவுகள் வாயிலாக, அதைச் செய்ய முடியாது.
மேல்முறையீடு மனுவை ஏற்க, எந்த தகுதியும் இல்லை என்பதால், அந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.