ராமேஸ்வரம் கோயில் சிற்பங்களை பாதுகாக்க வழக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
ராமேஸ்வரம் கோயில் சிற்பங்களை பாதுகாக்க வழக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
ADDED : ஜூலை 04, 2024 02:47 AM
மதுரை: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் சிற்பங்கள், ஓவியங்களை பாதுகாக்க தாக்கலான வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
திருச்சி ஸ்ரீரங்கம் கோபாலகிருஷ்ணன் தாக்கல் செய்த பொதுநல மனு:
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தொன்மையான சுவாமி சிலைகள், சிற்பங்கள், துாண்கள் உள்ளன. மூன்றாம் பிரகாரம் உலக பிரசித்தி பெற்றது.
துாண்கள், சிலைகள், ஓவியங்களை பலகைகள் மூலம் மறைத்து அறநிலையத்துறையினர் சேதப்படுத்துகின்றனர். சுத்தியல், உளியை பயன்படுத்துகின்றனர். பக்தர்கள் கேள்வி எழுப்பினால் சரியான பதில் இல்லை. கோயில் கட்டுமானத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
அறநிலையத்துறை கமிஷனர், கோயில் இணை கமிஷனருக்கு மனு அனுப்பினேன். பணி மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும். கட்டுமானம், சிற்பம், ஓவியங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு விசாரித்தது.
அரசு தரப்பு: பிரசாத விற்பனை ஸ்டால், அறிவிப்பு பலகை நிறுவப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தது.
நீதிபதிகள்: அறநிலையத்துறை கமிஷனர், கோயில் இணை கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. அரசிடம் அதன் தரப்பு வழக்கறிஞர் விபரம் பெற்று அடுத்தவாரம் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டனர்.